சென்னை: அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று சந்தித்து, கட்சியின் எதிர்காலம் குறித்து ஆலோசனை நடத்தினார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஜூலை 11-ம் தேதி பழனிசாமி கட்சி பொதுக்குழுவை நடத்தி, இடைக்காலப் பொதுச்செயலாளரானார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவர்களது ஆதரவாளர்களை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார்.
இது தொடர்பான வழக்கில் பழனிசாமி ஜூலை 11-ம் தேதி நடத்திய பொதுக்குழு செல்லும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கிடையில், கட்சியை இணைக்க எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுடன் இணைந்து பணியாற்றிய மூத்த தலைவர்களின் ஆசியைப் பெறுவோம் என ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதிமுக மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரனை அண்மையில் சந்தித்துவிட்டு வந்த ஓபிஎஸ், அவரை அதிமுகவின் அரசியல் ஆலோசகராக நேற்று நியமித்தார். அடுத்த சில மணி நேரங்களில், பண்ருட்டி ராமச்சந்திரனை கட்சியில் இருந்து நீக்கி கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாலர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள இல்லத்தில் பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் சந்தித்தார். சுமார் ஒரு மணி நேர சந்திப்புக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் கூறியதாவது: அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து, ஆலோசனைகளைப் பெற வந்தேன். பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவில் இருந்து நீக்கியது குறித்து பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும். அதிமுக தொடங்கப்பட்டதன் நோக்கம் குறித்தும், கட்சியின் கொள்கைகள் குறித்தும் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுவது தனித்துவமாக உள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, பொறுத்திருந்து பாருங்கள். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.