சென்னை: 3 மாதங்கள் தொடர்ந்து சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத காரணத்தால் பதவியை இழந்த 118 வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் மல்லிகா தொடர்ந்து மாமன்ற உறுப்பினராக செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி 118-வது மாமன்ற உறுப்பினராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த மல்லிகா. இவர் தொடர்ந்து 3 மன்றக் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை. இதன் காரணமாக சென்னை மாநகராட்சி சட்ட விதிகளின்படி அவர் தகுதி நீக்கம் ஆகிவிட்டார். இது தொடர்பாக மல்லிகா, சென்னை மாநகராட்சி இ-மெயில் மூலம் அனுப்பிய கடிதத்தில், மகளின் அறுவை சிகிச்சை காரணமாக, உடனிருந்து கவனிக்க வேண்டி இக்கட்டான மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக வெளிநாடு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், வெளிநாட்டில் இருந்த நாட்களில் தொலைபேசி, வாட்ஸ் அப், மற்றும் சமூக வலை தளங்கள் மூலமாக பொதுமக்களை தொடர்பு கொண்டு குறைகளை கேட்டுவருவதாக பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில், மல்லிகா மீண்டும் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக பணியாற்ற அனுமதிப்பது தொடர்பாக தீர்மானம் இன்று (செப்.29) மாமன்றக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்டது. இதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவை அளித்ததைத் தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மல்லிகா மீண்டும் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டது.