பாஜக-வை நிராகரித்த சுப்புலட்சுமி முதல் குமுறும் நயினார் நாகேந்திரன் வரை… கழுகார் அப்டேட்ஸ்!

தமிழ்நாடு முழுவதும் ‘மோடி கபடி லீக்’ போட்டிகள் நடந்துவந்த வேளையில், தமிழக பா.ஜ.க-வின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு துணைத் தலைவர் பாலாஜி தங்கவேல், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகியிருக்கிறார்.

பாலாஜி தங்கவேல்

அந்தப் பிரிவின் தலைவர் அமர் பிரசாத் ரெட்டியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே, ‘உங்க பூசாரித்தனமும் வேண்டாம்… பொங்கச்சோறும் வேணாம்…’ என்று அவர் கட்சியிலிருந்து விலகினாராம். எல்லாவற்றிலும் தன்னுடைய பெயரை முன்னிலைப்படுத்தச் சொல்வது, போட்டிக்கான பொருளாதார விவகாரங்களைக் கவனித்தது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இருவருக்கும் ஏற்பட்ட மோதலே பிரச்னைக்குக் காரணம் என்கிறார்கள் கமலாலய சீனியர்கள்.

தி.மு.க-விலிருந்து விலகிய துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனை, மீண்டும் அ.தி.மு.க-வில் சேர்க்க கொங்கு மண்டல சீனியர்கள் சிலர் பேசியிருக்கிறார்கள். இந்தத் தகவலை ஐடி விங் மூலமாகக் கசியவும் விட்டிருக்கிறார்கள். ஆனால் அவரோ, “எனக்கு வயசும் ஆகிடுச்சு… என்னால கட்சிப் பணியும் செய்ய முடியாது. அ.தி.மு.க-வுக்குப் போய் இருக்கிற மரியாதையைக் கெடுத்துக்கொள்ளவும் விரும்பவில்லை” என்று சொல்லிவிட்டாராம். “அப்படியானால் பா.ஜ.க?” என்று கேட்டபோது, “நான் இணையும் அளவுக்கு அந்தக் கட்சிக்குத் தகுதியே இல்லை.

சுப்புலட்சுமி ஜெகதீசன்

திராவிட இயக்கம் சார்பாக, மதவாத அரசியலுக்கு எதிராக மட்டுமே என்னுடைய குரல் ஒலிக்கும்” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாராம் சுப்புலட்சுமி ஜெகதீசன். “பா.ஜ.க-வில் சேர்ந்தால், உடனே பெரிய பொறுப்பு கிடைக்கும். இப்படி ஓவர் கான்ஃபிடென்ட்டாகப் பேசி உதாசீனப்படுத்திவிட்டாரே…” என்று புலம்புகிறார்கள் அவரை அண்டிப் பிழைக்கும் சிலர்.

வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அதே தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவது என்று முடிவெடுத்துவிட்டாராம் கனிமொழி எம்.பி. இதனால் மக்களைச் சந்திக்கக் கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் அவர் தவறவிடுவதே இல்லையாம். புதிய வாக்காளர்கள், இளைஞர்களின் வாக்குகளைக் கவர்வதற்காக கல்லூரி நிகழ்ச்சிகளில் அதிகம் தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறார்.

கனிமொழி

சமீபத்தில் ஒரு கல்லூரியில் நடந்த அறிவியல் கருத்தரங்கில் கலந்துகொண்ட அவர் இறுதியில், “வருங்காலம் உங்கள் கையில்… எனவே இனிவரும் தேர்தலில் நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்” எனச் சொல்லிப் பேச்சை முடித்தார். “அறிவியல் கருத்தரங்கில் அரசியலா… பிரசாரத்தை இப்போதே தொடங்கிவிட்டாரா அக்கா?” என்று பேசிக்கொள்கிறார்கள் உடன்பிறப்புகள்.

பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவரான நயினார் நாகேந்திரன் தி.மு.க-வுக்குச் செல்லவிருப்பதாக அடிக்கடி வதந்திகள் வலம்வருகின்றன. சமீபத்தில் மீண்டும் அப்படியொரு தகவல் பரவ, மேலிடத்திலிருந்து விசாரித்தார்களாம். ‘`சத்தியமா, நான் கட்சி மாறலை…’’ என்று மறுத்தவர், உடனடியாக இந்த வதந்தியைப் பரப்பியது யார் என்ற விசாரணையில் இறங்கியிருக்கிறார்.

நயினார் நாகேந்திரன்

கடைசியில் சொந்தக் கட்சியினரே இந்த வேலையைச் செய்வதைக் கண்டுபிடித்திருக்கிறார். கட்சியில் அவரது வளர்ச்சி பிடிக்காத சிலரே ஆள்வைத்து சமூக வலைதளங்களில் இது போன்ற வதந்திகளைப் பரப்புவதாக நயினார் நாகேந்திரன் தரப்பினர் குமுறுகிறார்கள்.

முதல்வர் ரங்கசாமிக்கும், பா.ஜ.க-வுக்கும் ஏற்பட்டிருக்கும் உரசல், வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்துவிட்டது. அதன் உச்சகட்டமாக செப்டம்பர் 23-ம் தேதி முதல்வரை மாற்ற வேண்டும் என்று கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க எம்.எல்.ஏ கல்யாணசுந்தரமும், பா.ஜ.க-வுக்கு ஆதரவு தரும் சுயேச்சை எம்.எல்.ஏ அங்காளனும் சட்டப்பேரவை வளாகத்திலேயே உண்ணாவிரதப் போராட்டத்தில் அமர்ந்துவிட்டார்கள். அதில் கடுப்பான முதல்வர் ரங்கசாமி, பா.ஜ.க முக்கிய நிர்வாகி ஒருவரை அழைத்து, “இதை நான் அமித் ஷாவிடம் சொன்னால் என்னவாகும் தெரியுமா?” என்று சீறினாராம்.

முதல்வர் ரங்கசாமி!

அதற்கு அந்த நிர்வாகி, “அவர் அனுமதியுடன்தான் இதெல்லாம் நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டிருக்கிறார். பா.ஜ.க தனக்கு ஸ்கெட்ச் போட்டுவிட்டதை உணர்ந்துகொண்ட முதல்வர் ரங்கசாமி, தனது எம்.எல்.ஏ-க்களையும், ஆதரவு தரும் சுயேச்சை எம்.எல்.ஏ-க்களையும் தக்கவைத்துக்கொள்வதற்கான வேலையைத் தொடங்கியிருக்கிறாராம்.

விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க-வில், தன் மகன் கெளதம சிகாமணிக்கு மாவட்டச் செயலாளர் பதவி அல்லது மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பதவி வேண்டுமெனக் காய்நகர்த்திவந்தார் அமைச்சர் பொன்முடி. அதேபோல அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்கு வந்த லட்சுமணனும் மாவட்டச் செயலாளர் பதவிக்குக் காய்நகர்த்தினார்.

கௌதம சிகாமணி

ஒருவேளை தன் மகனுக்கு இல்லாமல் லட்சுமணனுக்குப் பொறுப்பு வழங்கப்பட்டால் தன் செல்வாக்கு குறையும் என நினைத்த அமைச்சர், “இந்த முறை யாரும் போட்டியிட வேண்டாம். புகழேந்தியே இருக்கட்டும்” எனக் கூறி யாரையும் போட்டியிடவிடாமல் நாசுக்காகத் தவிர்த்துவிட்டாராம். அதுமட்டுமல்ல, தன் மகனையும் விழுப்புரம் மாவட்ட தி.மு.க தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் அமர்த்திவிட்டார். “விழுப்புரம் மாவட்டத்தில் தனக்குப் பிறகு தன் மகனுக்கான இடத்தை உறுதிசெய்துவிட்டார் பொன்முடி” என முணுமுணுக்கிறார்கள் மாவட்ட தி.மு.க-வினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.