பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளை ஒன்றிய அரசு நேற்று தடை செய்தது. ஐந்து ஆண்டுகளுக்கான தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது.
ஒன்றிய அரசு தடை விதித்தாலும் அந்தந்த மாநில அரசுகள் தடை விதித்து அரசாணை வெளியிட்டால் தான் தடை உத்தரவு செல்லுபடியாகும் என்ற அடிப்படையில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு, மற்றும் சட்டத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் தலைமைச் செயலாளர் இறையன்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளை தடை செய்து அரசாணை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளான ரிஹாப் இந்தியா பவுண்டேஷன்(ஆர்ஐஎப்), தேசிய மனித உரிமைகளுக்கான கூட்டமைப்பு (என்சிஹெச்ஆர்ஓ), தேசிய பெண்கள் முன்னணி, ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேஷன், அனைத்து இந்திய இஸ்லாமிக் கவுன்சில் (ஏஐஐசி), கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (சிஎப்ஐ) ஆகிய அமைப்புகளுக்கு தமிழக அரசும் ஐந்து ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தமிழக டிஜிபி, மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு அனுப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.