சென்னை/ கோவை / மதுரை: பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு நேற்று 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். மத்திய அரசின் தடை உத்தரவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக உளவு பிரிவு போலீஸார் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து மண்டல ஐஜிக்கள், காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
அதில், அனைத்து போலீஸ் அதிகாரிகளும் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளை முடுக்கி விட வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாக சந்தேகப்படும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் கீழ் கைது செய்ய வேண்டும். பொது மக்கள் பாதிக்காத வகையில், அனைத்து தரப்பு மக்களும் சுதந்திரமாக செயல்பட, பணிகளை கவனிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் கண்காணிப்பு பணியை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர். பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் வெவ்வேறு இடங்களில் சுமார் 500 பேர் திரண்டனர். மத்திய அரசின் தடை உத்தரவை கூறி அவர்களை போலீஸார் அனுப்பிவைத்தனர். மேலும், தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள், முக்கிய நிர்வாகிகளின் அலுவலகங்கள், வீடுகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவையில் 6 எஸ்.பி.க்கள்: இதேபோன்று, கோவையில் உக்கடம், கோட்டைமேடு, சாய்பாபாகாலனி என்.எஸ்.ஆர் சாலை ஆகிய இடங்களில் உள்ள பிஎஃப்ஐ மாவட்ட தலைமை அலுவலகங்கள் முன்பு போலீஸார் நிறுத்தப்பட்டனர். மாநகர பகுதியில் காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் தலைமையில் அனைத்து பிரிவுகளையும் சேர்த்து 3,500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர், செல்வபுரம், ரத்தினபுரி, கடைவீதி, ஆர்.எஸ்.புரம் என 7 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன. இதில் கடைவீதி, ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய எல்லையில் ஒரு எஸ்.பி.யும் மீதமுள்ள 5 காவல் நிலைய எல்லைகளை மையப்படுத்தி தலா ஒரு எஸ்.பி.யும் என மொத்தம் 6 எஸ்.பி.க்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. 28 இடங்களில் தற்காலிக சோதனைசாவடிகள் ஏற்படுத்தப்பட்டு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்கடத்தில் உள்ள பேக்கரி முன்பு நேற்று காலை பெண்கள் திரண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். காவல்துறையினர், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக சென்று கோட்டைமேட்டில் உள்ள பிஎஃப்ஐ அலுவலகம் முன்பு கோஷங்களை எழுப்பிவிட்டு கலைந்து சென்றனர். அதேபோல, மாவட்டத்தின் பிற பகுதிகளில் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரையில்: மதுரை நெல்பேட்டை உட்பட சில இடங்களில் ஆர்ப்பாட்டத்துக்கு பிஎஃப் அமைப்பின் நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர். அங்கு தெருத் தெருவாக ஒலிபெருக்கி மூலம் போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர். அதில், ‘மத்திய அரசு விதித்துள்ள தடையை மீறி யாரேனும் போராட்டத்துக்கு முயன்றால் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவர்’ எனத் தெரிவித்தனர். இதனால், போராட்டம் ஏதும் நடக்கவில்லை. நகர், புறநகர் பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சட்ட போராட்டம் நடத்துவோம்: தடை செய்யப்பட்ட அமைப்பைசேர்ந்த சிலர் கூறுகையில், காவல்துறை அதிகாரிகள் எங்களது தலைவர்களை நேரில் சந்தித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என கூறினர். அதனால், இனி சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றனர்.