சென்னை: உயர்கல்வித் துறை சார்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் விரிவுரையாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 1,024 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு உரிய நபர்களை தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த 2019-ம் ஆண்டு நவ.27-ம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது.
கணினி வழித் தேர்வு: தொடர்ந்து 2021 டிச.8 முதல் 13-ம் தேதி வரை கணினி வழித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அதன்படி, விரிவுரையாளர் பணியிடத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 1,024 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் வகையில் 11 பேருக்கு ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி, தலைமை செயலர் வெ.இறையன்பு, உயர்கல்வி செயலர் தா.கார்த்திகேயன், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் க.லட்சுமிபிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.