பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையை சித்திரிக்கும், சிலிக்கானால் செய்யப்பட்ட துர்க்கை பொம்மை, கொல்கத்தா துர்க்கை பூஜை விழாவில் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
நாடு முழுவதும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் துர்கை பூஜையை முன்னிட்டு, கொல்கத்தாவில் புதுப்புது வடிவமைப்புகளுடனும், மையக்கருப்பொருள்களுடனும் பந்தல்கள் அமைக்கப்படும். மதம் முதல் வரலாறு, காலநிலை மாற்றம் என்று சமூகப் பிரச்னைகளை எதிரொலிக்கும் விதமாகவும், வெளிக்காட்டும் விதமாகவும் பந்தல்கள் அமைக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு, பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையை சித்திரிக்கும் விதமாக, சிலிக்கானால் செய்யப்பட்ட பொம்மைகளுடன் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை, `நவ்பரா தாதாபாய் சங்க்’ எனும் பூஜை குழுவினர் வடிவமைத்துள்ளனர்.
இப்பந்தலை, மக்களவை உறுப்பினரும், நடிகருமான சத்ருகன் சின்ஹா திங்களன்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், “இப்படி ஒரு கருப்பொருளை யோசித்து, அதற்கான முயற்சியை மேற்கொண்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு வாழ்த்துகள். இந்த பந்தலை திறந்து வைக்க, நான்தான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். இது துர்க்கையம்மனின் அருள்.
மொத்த மேற்கு வங்கமும் வண்ணங்களால் துர்க்கை பூஜையை கொண்டாடுகிறது. சிலைகளை சிலிக்கானால் செய்துள்ளனர். துர்க்கை பூஜையில் இப்படி ஒரு முயற்சி நடைமுறைப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. பொதுவாக, துர்க்கையை தாயாக சித்தரிப்பார்கள். ஆனால், பாலியல் தொழிலாளர்களிலும் அம்மாக்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் விதமான இந்த முயற்சி பாராட்டுக்குரியது. இந்த ஆண்டு துர்க்கை பூஜைக்கான கருப்பொருள், எப்போதையும் விட சிறந்ததாக தோன்றுகிறது. இதன் மூலம் பாலியல் தொழிலாளர்கள் பற்றிய மக்களின் கண்ணோட்டம் மாற வாய்ப்புள்ளது” என்றார்.
இதுகுறித்து, இந்த கருப்பொருள் வடிவமைப்பாளரான சந்தீப் முகர்ஜி கூறுகையில், “இந்த முயற்சியின் மூலம் மக்கள் மனதில் பாலியல் தொழிலாளர்கள் பற்றிய கண்ணோட்டம் சிறிதேனும் மாறலாம். எங்களுடைய நோக்கமே சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வருவது. அவர்களை பெரும்பாலும் சமூக வட்டத்துக்குள் சேர்ப்பதில்லை. அவர்கள் தங்கள் வேலையை செய்யும்போது, அவர்களை ஏன் சமூகத்தில் ஏற்றுக்கொள்ள கூடாது?” என்று கேட்கிறார்.
மேற்கு வங்கத்தில் விதவிதமான கருப்பொருள்களில் துர்க்கை பூஜை பந்தல்கள் அமைக்கப்பட்ட போதும், கொல்கத்தாவில் உள்ள இந்த பந்தல், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.