புதுடெல்லி: ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், அதன் 8 துணை அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் நகரில் இந்திய இஸ்லாமிய மாணவர்கள் இயக்கம் (சிமி) கடந்த 1977-ல் தொடங்கப்பட்டது. இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்பதே இதன் நோக்கமாக இருந்தது. இந்திய அரசுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த இந்த அமைப்பை, 2001-ம் ஆண்டில் மத்திய அரசு தடை செய்தது.
இந்நிலையில், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பு கடந்த 2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சிமி அமைப்பின் மறு அவதாரம் என்றழைக்கப்பட்ட பிஎஃப்ஐ அமைப்புக்கு 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன.
பல்வேறு கலவரங்கள், போராட்டங்கள், படுகொலைச் சம்பவங்களில் பிஎஃப்ஐ அமைப்பின் நிர்வாகிகளுக்குத் தொடர்பு இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கடந்த 22-ம் தேதி தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் பிஎஃப்ஐ மற்றும் எஸ்டிபிஐ அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது 45 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, டெல்லி, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, அசாம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள பிஎஃப்ஐ அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள், அந்தந்த மாநில போலீஸாருடன் இணைந்து 2-வது முறையாக நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இதில் 247 பேரைப் பிடித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் நள்ளிரவில் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
பிஎஃப்ஐ மற்றும் அதன் 8 துணை அமைப்புகள், சமூக, பொருளாதார, கல்வி மற்றும் அரசியல் மேம்பாட்டுக்கான அமைப்புகள் என தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன.
ஆனால், சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்டப் பிரிவினரை ஒன்று திரட்டி, ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் ரகசிய நோக்குடன் அவை செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர்கள் இயக்கத்தைச் (சிமி) சேர்ந்த சிலர், பிஎஃப்ஐ அமைப்பின் நிறுவன உறுப்பினர்களாக உள்ளனர். மேலும், தடை செய்யப்பட்ட ஜமாத்-உல்-முஜாகிதீன் வங்கதேசம் (ஜெஎம்பி), சர்வதேச தீவிரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் ஆகியவற்றுடன் பிஎஃப்ஐ அமைப்புக்குத் தொடர்பு இருக்கிறது.
இதுதவிர, பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் தீவிரவாதச் செயல்களிலும் இந்த அமைப்புக்குத் தொடர்பு உள்ளது. தங்களுடைய சதித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக, உள்நாட்டிலிருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளிலிருந்தும் ஹவாலா முறையிலும், நன்கொடை என்ற பெயரிலும் பிஎஃப்ஐ அமைப்பு நிதி திரட்டி வருவதும் தெரியவந்துள்ளது.
பிஎஃப்ஐ அமைப்பினர் பல்வேறு தீவிரவாதச் செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, சஞ்ஜித் (கேரளா) வி.ராமலிங்கம் (தமிழ்நாடு), ஷரத் (கர்நாடகா) உள்ளிட்டோரின் கொலை வழக்குகள் தொடர்பாக இந்த அமைப்பினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். இதன்மூலம் பிஎஃப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகள் உள்நாட்டுப் பாதுகாப்பு, ஒற்றுமை, இறையாண்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது உறுதியாகிறது.
இந்த அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று உத்தரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் குஜராத் மாநில அரசுகள் பரிந்துரை செய்திருந்தன.
இது தொடர்பாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தேவையான பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. அவற்றின் அடிப்படையில், சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (1967) 3-வது பிரிவின் கீழ், பிஎஃப்ஐ மற்றும் கேம்பஸ் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (சிஎஃப்ஐ) உள்ளிட்ட அதன் 8 துணை அமைப்புகளும் தீவிரவாத அமைப்புகள் என அறிவிக்கப்படுகிறது. இந்த 9 அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
இந்த அமைப்புகளுக்குச் சொந்தமான சமூக வலைதளப்பக்கங்களை உடனே முடக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசையா சொத்துகள் பட்டியல்
மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள மற்றொரு உத்தரவில், “பிஎஃப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளுக்குச் சொந்தமான இடங்கள் எவை என்பதை மாநில அரசுகள் அறிவிக்கும். இந்த அமைப்புகளின் அசையா சொத்துகளின் பட்டியலை, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் தயார் செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட இந்த அமைப்புகளின் இடங்களில், அந்தந்த மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி யாரும் நுழையக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள பிஎஃப்ஐ உள்ளிட்ட 9 அமைப்புகளின் அலுவலகங்களில், மத்திய அரசின் அறிவிக்கையை ஒட்டுமாறு மாநில காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு அறிவிக்கையின் நகல் அனுப்பிவைக்கப்படும்.
அடுத்தகட்டமாக, சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு தீர்ப்பாயத்தை நிறுவும். இதில், பிஎஃப்ஐ அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வழக்குத் தொடரலாம். மேலும், இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள், தங்களுக்கும், இந்த அமைப்புகளுக்கும் தொடர்பு இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் வழக்கை எதிர்கொள்ள வேண்டும்.
தடை செய்யப்பட்ட அமைப்புகள்
ரிஹாப் இந்தியா ஃபவுண் டேஷன் (ஆர்ஐஎஃப்), கேம்பஸ் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (சிஎஃப்ஐ), அனைத்து இந்திய இமாம்கள் கவுன்சில் (ஏஐஐசி), நேஷனல் கன்ஃபெடரேஷன் ஆஃப் ஹியூமன் ரைட்ஸ் ஆர்கனைசேஷன் (என்சிஎச்ஆர்ஓ), நேஷனல் விமன்ஸ் ஃப்ரன்ட், ஜூனியர் ஃபிரன்ட், எம்பவர் இந்தியா ஃபவுண்டேஷன் மற்றும் ரிஹாப் ஃபவுண்டேஷன் (கேரளா) ஆகியவை தடை செய்யப்பட்ட 8 துணை அமைப்புகளகும்.
‘மத்திய அரசு முடிவை ஏற்கிறோம்’
பிஎஃப்ஐ அமைப்பின் கேரள மாநிலப் பொதுச் செயலர் அப்துல் சத்தார் தனது முகநூல் பதிவில், “பிஎஃப்ஐ அமைப்பு கலைக்கப்படுவதாக அனைத்து பிஎஃப்ஐ உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். பிஎஃப்ஐ அமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. நாட்டின் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்ற வகையில் மத்திய அரசின் முடிவை ஏற்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவு வெளியான சில மணி நேரங்களில் ஆலப்புழாவில் இருந்த சத்தார் கைது செய்யப்பட்டார்.