ஹவானா,
கரீபியன் நாடான கியூபாவின் மேற்கு பகுதிகளை நேற்று முன்தினம் இவான் என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று சூழன்றடித்தது.
இந்த புயலால் அந்த நாட்டின் முக்கிய மின்உற்பத்தி நிலையங்கள் கடும் சேதம் அடைந்தன. இதனால் மின்உற்பத்தி மற்றும் பகிர்மானம் பாதிக்கப்பட்டது.
இதன் எதிரொலியாக ஒட்டுமொத்த நாடும் இருளில் மூழ்கியது. இதனால் அந்த நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. 1.10 கோடி மக்கள் இருளில் தவிக்கின்றனர். மின்உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் முழு வீச்சில் நடந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இவான் புயலுக்கு 2 பேர் பலியானதாகவும், மிகப்பெரிய அளவில் பொருள் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் புயல் காரணமாக கியூபாவின் சில பகுதிகளில் 30 செ.மீ. வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.