பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த மர்ம நபர்கள் பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு கடிதம் மூதல் மிரட்டல் விடுத்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புகொண்டு இந்தியாவில் பயங்கரவாத செயல்களுக்கு துணைபுரிந்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய 8 அமைப்புகளுக்கு மத்திய உள்துறை 5 ஆண்டு தடை விதித்துள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட இடங்கள் உள்பட நாட்டின் பல பகுதிகளில் பிஎப்ஐ அமைப்பினர் பெட்ரோல் குண்டு வீச்சு உள்பட வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என்று காவல் நிலையத்திற்கு பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்த மர்ம நபர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் வீடுகளில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு தீ வைக்க மர்ம நபர்கள் முயற்சி செய்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த ஆறு பேரை மேற்கு காவல் நிலையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய ஆய்வாளருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் அல்லது கையெறி குண்டு வீசப்படும். காவல்துறை எங்களுக்கு எதிரி அல்ல. சட்டம்- ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும்- SDPI, PFT என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கடிதத்தால் பொள்ளாச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடிதத்தை அனுப்பிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.