பொன்னியின் செல்வன் முதல்பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரை காணக் காத்திருக்கிறது. அதையொட்டி பொன்னியின் செல்வன் நாவலின் முக்கிய கதாபாத்திரங்களுக்கான ஒரு அறிமுகம்தான் இந்தப் பகுதி.
அருள்மொழி வர்மர் – சோழ தேசத்து இளவரசர், சுந்தர சோழர் மற்றும் வானமாதேவியின் புதல்வன், ஆதித்த கரிகாலன் மற்றும் குந்தவையின் தமையன், வந்தியத்தேவனின் நண்பன், பிற்காலத்தில் சோழ தேசத்தின் மாபெரும் அரசனாக, இராஜராஜனாக விளங்கியவர்.
பொன்னியின் செல்வன் கதையில் வரும் ஒரு மிக முக்கிய கதாப்பாத்திரம் அருள்மொழி வர்மர். சோழ தேசத்து இளவரசராக, ஈழத்தில் போர் புரிந்து வருபவர். சோழ தேசத்து அரசரான சுந்தர சோழருக்கு ஆதித்த கரிகாலன் மற்றும் குந்தவைக்குப்பின் மூன்றாவதாகப் பிறந்தவர் தான் அருள்மொழி வர்மர். ஒருமுறை இவர்கள் அனைவரும் காவிரி ஆற்றில் படகில் பயணித்துக் கொண்டிருக்கும்போது அருள்மொழி வர்மன் தவறி விழுந்து விடவே, அவரை ஒரு கை காப்பாற்றி மேலேற்றி விடுகிறது. அதனால் காவிரி தாயே வந்து அருள்மொழி வர்மனைக் காப்பாற்றியது எனக் கருதி, அருள்மொழி வர்மனை பொன்னியின் செல்வன் என்று அழைப்பார்கள்.
அதே போலவே நந்தினியின் வலையில் சிக்காத இருவர் வந்தியத்தேவன் மற்றும் அருள்மொழி வர்மன் தான். அருள்மொழி வர்மன் இயல்பிலேயே பரந்த மனப்பான்மை உடைய, பிறருக்கு உதவும், எதையும் விட்டுக்கொடுக்கும் நற்குணம் உடையவனாகக் காட்டப்படுகிறான். ஈழத்தில் வென்று, அரசராக வாய்ப்பு கிட்டியபோதும் அதை பெருமிதமாக மறுத்து விடுகிறேன். தனக்கு கிடைத்த அரியணை ஏறும் வாய்ப்பையும் விட்டுக்கொடுத்திருப்பார்.
அருள்மொழி வர்மன் ஈழத்தில் இருக்கும்போது, சோழ தேசத்தில் குழப்பம் உருவாகவே, உடனடியாக தஞ்சை வரச்சொல்கிறார் சுந்தர சோழர். ஆனால் பதவியின் மீது ஆசையில்லாத அருள்மொழி அதை மறுத்து விடவே, அரசரின் பேச்சுக்கு இணங்காததால், அருள்மொழி வர்மனை கைது செய்து வர ஆள் அனுப்புகிறார் பழுவேட்டரையர்.
அதற்கு முன்பே அருள்மொழி வர்மனை தஞ்சை அழைத்து வர வந்தியத்தேவனை ஈழத்திற்கு அனுப்புகிறார் குந்தவை. அவரை ஈழத்திலேயே இருக்கச் சொல்லி ஆழ்வார்க்கடியான் நம்பியை அனுப்புகிறார் அநிருத்தர். அதே சமயம் அருள்மொழி வர்மனை காஞ்சிக்கு அழைத்துவர பார்த்திபேந்திர பல்லவனை அனுப்புகிறார் ஆதித்த கரிகாலன். இதற்கிடையில் அருள்மொழி வர்மனை கொல்வதற்காக ஈழத்திற்கு சென்றனர் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள். இவ்வளவு தடங்கள்களை தாண்டி அருள்மொழி வர்மன் தஞ்சைக்கு வந்தாரா? தந்தையின் ஆசைகினங்க சோழ தேசத்து அரியணை ஏறினாரா? என்பதை விளக்குகிற கதை தான் பொன்னியின் செல்வன். இந்த அருள்மொழி வர்மன் தான் பிற்காலத்தில் சோழ தேசத்தின் மாபெரும் அரசனாக, இராஜராஜனாக விளங்கினார். இவர் தான் தஞ்சையிலுள்ள பிரமாண்டமான பெரிய கோவிலைக் கட்டினார்.
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தில் அருள்மொழி வர்மராக ஜெயம் ரவி நடித்திருக்கிறார். அருள்மொழி வர்மர் பற்றிய சுவாரஸ்யமானத் தகவல்களை கமெண்டில் பதிவிடவும்.
4 முறை பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த விகடன், இப்போது 5-ம் முறையாக வரும் அக்டோபர் 8, 9, 10 ஆகிய நாள்களில் மீண்டும் நம் வாசகர்களை வந்தியத்தேவன் வழியில் ஒரு வரலாற்றுப் பயணத்துக்கு அழைத்துச் செல்லவிருக்கிறது.
முன்பதிவு விவரங்களுக்கு 97909 90404