நாளை செப்டம்பர் 30ம் தேதி இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்டப் பல மொழிகளில் உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெளியாகிறது. அதேசமயம், 2017ம் ஆண்டு இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன் ஆகியோர் நடிப்பில் தமிழில் வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் தற்போது இந்தி மொழியில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலி கான் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது. பாலிவுட்டில் இந்தி மொழியில் வெளியாகவுள்ள இப்படத்தை இயக்குநர்கள் புஷ்கர் காயத்திரி இயக்கியுள்ளனர். இப்படம் நாளை ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியாகும் அதே நாளில் (செப்டம்பர் 30) வெளியாகிறது.
இந்நிலையில் பாலிவுட்டில் வெளியாகும் ‘விக்ரம் வேதா’ திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்துடன் போட்டிபோடுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ‘விக்ரம் வேதா’ படத்தின் இயக்குநரான புஷ்கர் இவ்வாறு கூறியிருந்தார். “பொன்னியின் செல்வன் ஒரு காவியப் படைப்பு. சோழப் பேரரசின் காலத்தில் நடந்த சூழ்ச்சிகளை வைத்து எழுதப்பட்டது. நான் படித்த ஆறு தொகுதிகள் கொண்ட புத்தகம் அது. சென்னையிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் அந்தப் புத்தகம் ஒரு உத்வேகம் அளிப்பதாக இருந்திருக்கிறது. அந்தப் படத்துடன் போட்டிபோட முடியாது. இரண்டு படங்களையும் மக்கள் பார்ப்பார்கள். நான் நிச்சசயம் பொன்னியின் செல்வன் படத்தைப் பார்ப்பேன்” என்று கூறினார்.
மேலும் இந்தியில் எடுக்கப்பட்ட ‘விக்ரம் வேதா’ படம் பற்றி பேசிய படத்தின் இயக்குநர் புஷ்கர் காயத்திரி, “ஏற்கெனவே தமிழில் எடுத்த அதே காட்சிகளை மீண்டும் இந்தியில் எடுக்கிறோம் என்று நாங்கள் ஒருபோதும் உணர்ந்ததில்லை. ஒவ்வொரு காட்சியை எடுக்கும்போதும் நீண்ட நேரம் கலந்துரையாடினோம். தமிழில் எடுத்த அதே பாணியில் இதை எடுக்கவில்லை. இரண்டு படங்களுக்கும் ஆத்மா ஒன்றுதான். ஆனால் இரண்டும் வெவ்வெறு பாணியில் இருக்கும்” என்று கூறினார்.