பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு வந்த மர்ம கடிதம்.. 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்!!

தமிழ்நாடு மற்றும் கேரளா உட்பட நாடு முழுவதும் உள்ள 10 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள் மற்றும் அதன் இணைப்புகள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தியது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு உள்பட நாட்டின் பல பகுதிகளில் இஸ்லாமிய மத அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பாஜக மற்றும் இந்து மத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த சம்பவங்களால் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

தற்போது, இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். மேலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.

இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி போலீசாருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில், ‘பொள்ளாச்சியில், 16 இடங்களில், பெட்ரோல் குண்டு வீசப்படும் அல்லது கையெறி குண்டு வீசப்படும். காவல் துறை எங்களுக்கு எதிரியல்ல. சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த வேண்டும்’ என, எஸ்.டி.பி.ஐ., – பி.எப்.ஐ., குமரன் நகர் என எழுதப்பட்டுள்ளது. அதை யார் அனுப்பியது என்ற விபரங்கள் எதுவும் குறிப்பிடாமல், காவல் நிலையத்திற்கு தபாலில் வந்துள்ளது. இது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., பத்ரி நாராயணனிடம் கேட்டபோது, “பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்திற்கு வந்த கடிதம் குறித்து விசாரிக்கப்படுகிறது. வாகனங்களை சேதப்படுத்திய வழக்கில் மேலும் இருவரை பிடித்து விசாரிக்கிறோம். இது குறித்து அறிக்கை வழங்கப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.