குழந்தைகள் தெரியாத வயதில் மண்ணை அள்ளிச்சாப்பிடுவதை கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் ஒருவர் கடந்த ஒரு ஆண்டாக ஸ்டீல் ஸ்பூன் சாப்பிட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இம்மாநிலத்தில் உள்ள முஜாபர் நகரில் இருக்கும் போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்கும் மையத்தில் விஜய் என்பவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சேர்க்கப்பட்டார். அந்த மையத்தில் அவரின் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டது. உடனே அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சோதனை செய்து பார்த்ததில் வயிற்றில் ஸ்பூன்கள் அதிக அளவில் இருந்தது தெரிய வந்தது.
உடனே அவரிடம் ஸ்டீல் ஸ்பூன் சாப்பிடுவாயா என்று கேட்டதற்கு, கடந்த ஒரு ஆண்டுகளாக தான் தங்கியிருந்த மையத்தில் ஸ்பூனை சாப்பிடும்படி கொடுத்ததாக தெரிவித்தார். உடனே டாக்டர்கள் அவருக்கு ஆபரேசன் செய்து 63 ஸ்டீல் ஸ்பூன்களை வயிற்றில் இருந்து அப்புறப்படுத்தினர். இந்த ஆபரேசன் இரண்டு மணி நேரம் நீடித்தது. இந்த அளவுக்கு வயிற்றில் இருந்து இதற்கு முன்பு பொருட்களை அகற்றியதில்லை என்று ஆபரேசன் செய்த டாக்டர் குரானா தெரிவித்தார். தற்போது விஜய் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல் நிலை இன்னும் மோசமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். விஜய் குடும்பத்தினர், விஜயை கட்டாயப்படுத்தி ஸ்பூன்களை சாப்பிட செய்ததாக போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்கும் மையத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
எனினும் விஜய், இந்த கரண்டிகளை விழுங்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாக ஒரு முறையும், தானே விரும்பி தான் அதை விழுங்கினேன் என மற்றொரு முறையும் கூறியிருக்கிறார். இது தொடர்பாக எந்த வித புகாரும் அளிக்கப்படவில்லை. ஆனால் இது குறித்து போலீஸில் புகார் செய்ய விஜய் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் மட்டும் வெளியாகி இருக்கிறது.