மதுரை அதிமுக பொதுக்கூட்டம் | சிரிப்பு உரை எனச் சொன்ன ஆர்.பி.உதயகுமார் – கோபித்துக் கொண்ட செல்லூர் ராஜூ

மதுரை: ‘‘திமுக ஆட்சியை அகற்ற மதுரையில் பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது’’ என்று அதிமுக எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை பழங்காநத்தத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் சட்டசபை எதிர்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், ‘‘கொங்கு மண்டலத்தில் பறந்த கே.பழனிசாமி கொடி, தற்போது தென்மண்டலத்தில் பறக்க ஆரம்பித்துள்ளது. தமிழர்களின் ஒரே நம்பிக்கையாக இபிஎஸ் உள்ளார். மக்கள் விரோத ஆட்சியை நடத்துகிற திமுக ஆட்சியை அகற்ற மதுரையில் பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது. அதற்கு கே.பழனிசாமி தலைமையில் அணி திரள்வோம்’’ என்றார்.

அமைப்பு செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா பேசுகையில், ‘‘மதுரையின் அரசியல்தான் தமிழக எதிர்கால அரசியலை தீர்மானிக்கும். அந்த அடிப்படையில் தற்போது திரண்டுள்ள கூட்டம், அதிமுகவுக்கு மட்டுமில்லாது தமிழகத்திற்கும் விடிவு காலத்தை ஏற்படுத்தும். 4 1/2 ஆண்டு காலம் அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த கே.பழனிசாமி, 50 முறை மதுரை வந்துள்ளார். இன்று சிலர் நீதிமன்றம் சென்று வருகிறார்கள். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்மாவட்டம் அதிமுக கே.பழனிசாமி பக்கம் நிற்கும். உதயநிதி ஸ்டாலின், செங்கலை காட்டி எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வருவோம் என்று வாக்கு பெற்று சென்றார். ஆனால், இந்த திட்டம் திமுக ஆட்சியில் வராது. மீண்டும் கே.பழனிசாமி முதலமைச்சராக வந்தபிறகே இந்த திட்டம் வர வாய்ப்புள்ளது’’ என்றார்.

செல்லமாக கோபித்துக் கொண்ட செல்லூர் ராஜூ

கூட்டத்தில், செல்லூர் கே.ராஜூ பேச வருவதற்கு முன் ஆர்.பி.உதயகுமார், அடுத்து முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சிரிப்பு உரையாற்றுவார் என்று சொல்லிவிட்டு அமர்ந்தார். அதற்கு செல்லூர் ராஜூ, வீர உரையாற்றுகிறார் என்று சொல்வதை விட்டு நம்மை காமெடியாக சிரிப்பு உரை ஆற்றுவார் என்று சொல்லி செல்கிறார் என்று செல்லமாக ஆர்.பி.உதயகுமாரிடம் கோபித்துக் கொண்டார்.

செல்லூர் கே.ராஜூ பேசுகையில், ‘‘இன்று ஆட்சியா நடக்கிறது. காட்சிதான் நடக்கிறது. தினமும் படப்பிடிப்பும், புகைப்படம் பிடிப்பும் நடக்கிறது. கே.பழனிசாமி மக்களோடு நின்று மாளிகையைப் பார்க்கிறார். ஆனால், சிலர் மாளிகையில் இருந்து மக்களை பார்க்கிறார்கள். திமுக பேசி பேசி ஆட்சிக்கு வந்ததாக சொல்வார்கள். ஆனால், இன்று ஒவ்வொரு அமைச்சரும் உளறிப் பேசி பேசி ஆட்சியை அவர்களே கவிழ்க்கப்போகிறார்கள்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.