மதுரை: மனித கழிவை அள்ள மனிதர்களை பயன்படுத்தினால், அந்த மாவட்ட ஆட்சியர்கள் சஸ்பெண்டு செய்யப்படுவர் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில், மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் துப்புரவுத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், அதை தடுக்க சட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், இன்றுவரை மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலை தொடர்ந்து வருகிறது.
நாடு முழுவதும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவது 06.12.2013 முதல் தடை செய்து மத்தியஅரசு சட்டம் இயற்றியுள்ளது. அதன்படி, எந்த ஒரு தனி நபரோ அல்லது அமைப்போ மேற்குறிப்பிட்ட தேதியிலிருந்து மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் எந்தவொரு நபரையும் ஈடுபடுத்துவதோ அல்லது இதற்காக பணியமர்த்துவதோ தடை செய்யப்பட்டுள்ளது. அது போன்று மனித கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை அமர்த்துவது 2013ஆம் ஆண்டு தடைச்சட்டத்திற்கு எதிரானது என்றும் இந்தச் சட்டத்தை மீறுவோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை அல்லது ரூ.1 லட்சம் வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இருந்தாலும், நாடு முழுவதும் மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஏராளமானோர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, கடந்த மார்ச் மாதம் மாநிலங்களவையில், அமைச்சர் அத்வாலே கூறியிருந்தார். அதன்படி, தமிழ்நாட்டில் 398 துப்புரவு தொழிலாளர்கள் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், இந்த பணியின்போது, தமிழ்நாட்டில் 2017முதல் 2021-ஆம் ஆண்டு வரை 43 தொழிலாளர்கள் உயிரிழந் திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், அதிக பட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 32,473 தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டிருப்ப தாக அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பாளையங்கோட்டையை சேர்ந்த அய்யா என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதற்கு 2013-லேயே தடை விதிக்கப்பட்டது. தடை இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் மனித கழிவுகளை மனிதர்கள் எடுக்கும் அவலம் தொடர்ந்து வருகிறது. மனித கழிவுகளை இயந்திரங்களை கொண்டு அள்ளுவதற்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைகிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து, மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதை தடுக்காத மாவட்ட ஆட்சியர்கள் பணியிடை நீக்கம் செய்ய நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், தூய்மை பணியாளர்களுக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும் என தெரியவில்லை என வேதனை தெரிவித்த நீதிபதிகள், மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதை ஒருபோதும் நீதிமன்றம் அனுமதிக்காது எனவும், மனித கழிவுகளை மனிதன் அள்ள தடை விதித்த உத்தரவை செயல்படுத்திய ஆவணங்களை தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் முழுமையான பதில் மனு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஆணையிடப்பட்டது.