மன்னர் சார்லஸ் உருவத்துடன் புதிய கரன்சி வந்தாலும் பழைய நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்படாது

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவை அடுத்து மூன்றாம் சார்லஸ் அந்நாட்டு மன்னராக பொறுப்பேற்றுள்ளார்.

பிரிட்டன் இறையான்மை விதிகளின்படி கரன்சிகளில் ஆட்சியிலிருப்பவரின் உருவப்படம் பொறிக்கப்பட வேண்டும்.

புதிதாக அச்சடிக்கப்படும் நோட்டுகளில் ராணி எலிசபெத் படத்துக்கு பதிலாக மன்னர் சார்லஸ் உருவப்படத்தை மாற்றி அச்சிடும் பணி துவங்கி இருப்பதாக இங்கிலாந்தின் மத்திய வங்கியான பாங்க் ஆஃப் இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

புதிய நோட்டுகளில் மன்னர் சார்லஸ் உருவம் இடது புறம் பார்ப்பது போன்று இருக்கும், அந்நாட்டு வழக்கப்படி முந்தைய ஆட்சியாளர் பார்க்கும் திசைக்கு எதிர்புறமாக அடுத்த ஆட்சியாளர் பார்ப்பது போன்று இருக்க வேண்டும், முன்னதாக ராணி எலிசபெத் வலது புறமாக பார்ப்பது போன்று இருந்தது.

நோட்டுகளின் முன்புறம் ஆட்சியில் இருப்பவர் உருவமும் பின்புறம் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ஜேன் ஆஸ்டன் உள்ளிட்ட அந்நாட்டின் முக்கிய தலைவர்கள் படம் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

5, 10, 20 மற்றும் 50 பவுண்ட் நோட்டுகளில் மன்னர் சார்லஸ் படத்தை அச்சிடும் பணி துவங்கியுள்ள நிலையில் அவை இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று கூறியுள்ளது.

இருந்தபோதும், அடுத்த ஆண்டு பிற்பகுதியில் தான் மன்னர் சார்லஸ் படம் போட்ட நோட்டுகள் குறிப்பிடக்கூடிய அளவில் புழக்கத்திற்கு வரும் என்று கூறப்படுகிறது.

கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த ராணி எலிசபெத் உருவப்படம் பொறித்த 470 கோடி (4.7 பில்லியன்) கரன்சி நோட்டுகளும் 2700 கோடி (27 பில்லியன்) நாணயங்களும் இங்கிலாந்தில் புழக்கத்தில் உள்ளது.

இதனால் கோடிக்கணக்கான நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஒரே நேரத்தில் மதிப்பிழப்பு செய்து புதிய நோட்டு மற்றும் நாணயத்தை வெளியிடுவது என்பது காட் சேவ் தி கிங் என்று தேசிய கீதத்தின் வரிகளை மாற்றியது போல் எளிதான காரியமில்லை.

அதனால் புதிய நோட்டுகள் மற்றும் நாணயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புழக்கத்தில் விடப்படும் என்றும் ராணி படம் போட்ட பழைய நோட்டுகள் / நாணயங்கள் தேய்ந்து அல்லது சேதமடைந்தால் மட்டுமே புழக்கத்தில் இருந்து அகற்றப்படும் என்று பாங்க் ஆஃப் இங்கிலாந்து தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், மன்னர் சார்லஸ் உருவப்படத்துடனான கரன்சி மற்றும் நாணயங்கள் அடுத்த ஆண்டு மத்தியில் புழக்கத்தில் வந்தாலும் ராணி எலிசபெத் படத்துடன் கூடிய நோட்டுகள் புழக்கத்தில் இருந்து முழுமையாக வெளியேற மேலும் சில ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது.

பிரிட்டன் தவிர, ஆஸ்திரேலியா, கனடா, நியூஸிலாந்து மற்றும் கரிபியன் நாடுகளிலும் ராணி எலிசபெத் உருவப்படத்துடன் கரன்சிகள் புழக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.