விழுப்புரம்: மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில், நிபந்தனை ஜமீனில் வெளியே வந்த பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர். அவர்களிடம் போலீசார் 2 மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உட்பட 5 பேருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
அதன்படி, 5 பேரும் நேற்று காலை 10.30 மணியளவில் விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் கூடுதல் எஸ்பி கோமதி முன்னிலையில் ஆஜராகி கையெழுத்திட்டனர். தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் 2 மணி நேரம் விசாரணைகள் மேற்கொண்டனர். அண்மையில் வெளியான சிசிடிவி காட்சிகள் தொடர்பாகவும் அவர்களிடம் விசாரித்ததாக தெரிகிறது. அப்போது பள்ளி நிர்வாகம் சார்பில் 5 பைகளில் ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் வழங்கியுள்ளனர்.