புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முடிவெடுத்துள்ளார். அசோக் கெலாட் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டால், ராஜஸ்தான் முதல்வராக சச்சின் பைலட்டை நியமிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது.
இது தொடர்பாக கருத்து கேட்க, ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தை காங்கிரஸ் கூட்டியது. ஆனால், அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 82 பேர், சச்சின் பைலட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் அளித்தனர். மேலும், காங்கிரஸ் கட்சி கூட்டிய எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், அமைச்சர்கள் சாந்தி தரிவல், மகேஷ் ஜோஷி, தர்மேந்திர ரத்தோர் ஆகியோர் தனியாக கூட்டிய கூட்டத்தில் பங்கேற்றனர்.
இது காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் மல்லிகார்ஜூன கார்கே, அஜய் மக்கன் ஆகியோருக்கும், தலைவர் சோனியா காந்திக்கும் அதிர்ச்சியை அளித்தது. ‘இந்த அரசியல் குழப்பத்திற்கு நான் காரணம் இல்லை. எனக்கு தெரியாமல் எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடத்தப்பட்டது என அசோக் கெலாட் தெரிவித்துவிட்டார். இதனால் இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் முடிவு செய்தது.
இதையடுத்து ராஜஸ்தான் அமைச்சர்கள் சாந்தி தரிவல், மகேஷ் ஜோஷி, தர்மேந்திர ரத்தோர் ஆகியோரிடம் ‘ஒழுங்கீனமாக நடந்து கொண்டதுஏன்? உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? என்பதற்கு 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.