தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையில் நடைபெற்ற ரி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்திய சுற்றுப்பயணத்தில் ஈடுப்பட்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று ரி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இதன்படி இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது ரி20 போட்டி கேரள தலைநகரம் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்ட் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று (28) இடம்பெற்றது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா களத்தடுப்பில் ஈடுப்பட்டார். துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ஓட்டங்கள் எடுத்தது.
இந்திய அணியின் தரப்பில் அர்ஷ்தீப் 3 விக்கெட்களையும், தீபக் சஹார் ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 107 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 16.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 110 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் சூர்யகுமார் 33 பந்துகளுக்கு 50 ஓட்டங்கள், ராகுல் 56 பந்துகளுக்கு 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி ரி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இத்தொடரின் 2 ஆவது ரி20 போட்டி ஒக்டோபர் 02 ஆம் திகதி குவஹாத்தியில் நடைபெறவுள்ளது.