யோக நரசிம்மராக சிம்ம வாகனத்தில் மலையப்பஸ்வாமி| Dinamalar

திருப்பதி :திருமலையில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின். 3ம் நாள் காலை யோக நரசிம்மர் அலங்காரத்தில் மலையப்பஸ்வாமி சிம்ம வாகனத்தில் மாடவீதியில் எழுந்தருளினர்.திருமலையில் ஏழுமலையான் பிரம்மோற்சவம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன், 3ம் நாளான நேற்று காலை, 8 மணி முதல், 10 மணி வரை ஏழுமலையானின் உற்சவமூர்த்தியான மலையப்பசுவாமி யோக நரசிம்மர் அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் மாடவீதியில் எழுந்தருளி சேவை சாதித்தார். மாட வீதிகளில் நடந்த வாகனசேவையில் பல்வேறு கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தன. வாகனசேவைவை கேலரிகளில் கூடியிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினர்.

சிம்ம வாகனம் – தைரியம்

மூன்றாம் நாள் காலை, துஷ்டர்களைத் தண்டிக்கவும், அறத்தைப் பாதுகாக்கவும் மலையப்பஸ்வாமி சிங்கத்தின் மீது அமர்ந்து ஊர்வலம் செல்கிறார். சிங்கம் என்பது வீரம், தைரியம், புத்திசாலித்தனம், ஆதிக்கம், மஹத்வானி ஆகியவற்றின் அடையாளம். காலையில் எழுந்ததும் பார்க்க வேண்டிய முக்கியமான விஷயம் ‘சிம்மதர்சனம்’. சிம்ம ரூப தரிசனத்தால் மேற்கண்ட சக்திகள் அனைத்தும் செயல்படுகின்றன.சோம்பேறித்தனத்தை இழந்து விடாமுயற்சியுடன் போராடி வெற்றியை அடைவதில் ஆதிக்க உணர்வு மேலோங்குகிறது. அறியாமையால் நடந்துகொள்ளும் தீயவர்களை அழிக்க நானும், என் வாகனமான சிம்மமும் சம முயற்சி செய்கிறோம் என்பதை இந்த சிம்ம வாகனத்தின் மூலம் மலையப்பஸ்வாமி உணர்த்துகிறார்.

திருமஞ்சனம்

மாடவீதியில் பவனி வந்த களைப்பை போக்க மலையப்பஸ்வாமிக்கும் ஸ்ரீதேவி பூதேவிக்கும் கல்யாண உற்சவ மண்டபத்தில் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பால், தயிர், தேன், இளநீர், பழரசங்கள், மஞ்சள், சந்தனம், செந்சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை திருமலை ஜீயர்கள் தங்கள் கைகளால் எடுத்துத்தர அர்ச்சகர்கள் உற்சவமூர்த்திக்கு திருமஞ்சனம் செய்வித்தனர். திருமஞ்சனத்தின் போது பல்வேறு உலர் பழங்கள், வெளிநாட்டு பழங்களால் ஆன மாலைகள், கிரீடங்கள் உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டது.பின்னர் அவர்களை பட்டு வஸ்திரம், வைர வைடூரிய ஆபரணங்களால் அலங்கரித்து நெய்வேத்தியம் சமர்பித்து ஊஞ்சலில் அமர வைத்தனர். சிறிது நேரம் ஊஞ்சல் சேவை கண்டருளிய மலையப்பஸ்வாமிக்கு கீர்த்தனைகள், நாதஸ்வர இசை, மேளதாளங்கள் உள்ளிட்டவை இசைக்கப்பட்டன.

முத்துபந்தல் வாகனம்

பிரம்மோற்சவ வாகன சேவைகளில், 3ம் நாள் இரவு கடலில் பிறக்கும் வெண்மையான முத்துக்களால் அழகுற அலங்கரிக்கப்பட்டமுத்துபந்தல் வாகனத்தில் மலையப்பஸ்வாமி தன் தாயார்களான ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளினார்.கடலின் ஆழத்தில் உள்ள சிப்பியில் சேரும் ஒரு துளி மழைநீரானது வளர்ந்து முத்தாக பிறக்கிறது. இத்தகைய மகிமை வாய்ந்த முத்துகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வலம் வரும் மலையப்பஸ்வாமியை தரிசித்தால் நமக்கு இறை நம்பிக்கையும், இறையுணர்வும் மேலோங்கும். வாகனசேவைக்கு முன் வேத கோஷமும், பின் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இந்த வாகன சேவையில் திருமலை ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.