புதுடெல்லி: மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அடுத்த மாதம் 17-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. 22 ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கும் இந்தத் தேர்தலில் அக்கட்சியின் ஜி 23 தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இருவரும் போட்டியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று அசோக் கெலாட் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டால்,காங்கிரஸ் கொள்கையின்படி அவர் ராஜஸ்தான் முதல்வர் பதவியை துறக்க வேண்டும். அவரைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் அடுத்த முதல்வராக, ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டை நியமிக்க கட்சித் தலைமை முடிவு செய்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அசோக் கெலாட் ஆதரவு ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்து ஆளுநரிடம் கடிதம் கொடுத்திருந்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சித்தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டியிடுவது உறுதி அற்று இருக்கிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் திக்விஜய் சிங் போட்டியிட இருக்கிறார். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை பணிகளில் இருந்த அவர், புதன் கிழமை டெல்லி வந்துள்ளார். மேலும் டெல்லி வருவதற்கான எந்த திட்டமும் என்னிடம் இல்லை. இந்தத் தேர்தலுக்காக நான் டெல்லி வந்திருக்கிறேன். நான் காந்தி குடும்பத்துடன் இன்னும் பேசவில்லை. ஆனாலும் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், காங்கிரஸ் தலைமை ராஜஸ்தான் நிலவரம் குறித்து விளக்கம் கேட்டு கெலாட் ஆதரவாளர்கள் மூன்று பேருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில் புதன்கிழமை இரவு அசோக் கெலாட் டெல்லி வந்தடைந்தார். அவர் இன்று சோனியா காந்தியை சந்திக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், உட்கட்சி பூசல்கள் வரும் போகும். நாங்கள் அதனை சரி செய்வோம் என்று தெரிவித்திருந்தார்.