ராமநாதபுரம் வினாத்தாள் லீக் விவகாரம்: ஆசிரியரை பழிவாங்க மற்றொரு ஆசிரியரே போட்ட சதி திட்டம் அம்பலம்!

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே ஏ.மணக்குடி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 6,7 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான அறிவியல் பாடப் பருவ தேர்வு இன்று நடைபெற உள்ளது. இதற்காக ராமநாதபுரம் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் வினாத்தாளை பள்ளி தலைமை ஆசிரியரிடம் நேற்று வழங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று நடைபெற உள்ள தேர்வுக்கான வினாத்தாளை நேற்றே மாணவர்களுக்கு வழங்கியதாக சர்ச்சை எழுந்தது. சமூக வலைதளங்களிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் வினாத்தாள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.

வினாத்தாளை வெளியிட்டதாக கூறப்படும் பள்ளி

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்துவிடம் பேசினோம், “அப்பள்ளி தலைமை ஆசிரியர் விடுமுறையில் சென்றுள்ளதால், மற்றொரு ஆசிரியர் ஜெயக்குமார் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்துள்ளார். அவர் அறிவியல் தேர்வுக்கான மாதிரி வினாத்தாளை மாணவர்களுக்கு வழங்கி படிக்குமாறு கூறியுள்ளார். இதனை உள்நோக்கத்துடன் பழிவாங்க வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியில் அதே பள்ளியில் பணியாற்றும் மற்றொரு ஆசிரியர் புகைப்படம் எடுத்து வாட்ஸ் ஆப்பில் அனுப்பியது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இன்றைய அறிவியல் தேர்வுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் பாதுகாப்பாக பீரோவில் தான் வைக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்

சமூக வலைதளங்களில் பரவும் வினாத்தாள் தேர்வுக்கான வினாத்தாள் அல்ல. இது தொடர்பாக மேற்கண்ட பள்ளிக்கு சென்று புகைப்படத்தை பரப்பிய ஆசிரியரிடம் விசாரணை நடத்த உள்ளேன். அவர் தான் இந்த புகைப்படத்தை பரப்பினார் என்பதற்கான ஆதாரமும் கிடைத்துள்ளது. விசாரணையில் உறுதிபடுத்தப்பட்ட பிறகு அவர் பணியிட நீக்கம் செய்யப்படுவார்” என கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.