பெங்களூருவில் நிகழ்ந்த பெரு வெள்ளத்தை கண்டு கர்நாடகா மட்டுமல்லாமல் நாடே பெரும் அதிர்ச்சிக்கு ஆளானது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு பொழிந்த மழையால் ஐ.டி. நகரம் நீரில் மூழ்கியது பெங்களூரு வாசிகளை பெருமளவில் பாதிக்கச் செய்தது.
அதிலும் வெள்ள நீரில் மூழ்கிய வாகனங்களை மீட்டு அவற்றை சரிசெய்ய பெங்களூரு மக்கள் படாத பாடு படவேண்டியதாய் போனது. ஆகையால் ஆடி, லெக்ஸஸ் போன்ற ஃப்ரீமியம் கார் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்திருந்தது. ஆனால் அதே பெங்களூருவைச் சேர்ந்த அனிருத் கணேஷ் என்பவர் தனது ஃபோக்ஸ்வேகன் போலோ காரை சர்வீஸ் விட்டவருக்கு நடந்த சம்பவத்தை மனம் நொந்து தனது லிங்க்ட்-இன் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அதில், வெள்ளத்தில் மூழ்கிய தனது போலோ டி.எஸ்.ஐ. பெட்ரோல் காரை ஒயிட்ஃபீல்டில் உள்ள ஆப்பிள் ஆட்டோ எனும் சர்வீஸ் சென்டரில் அனிருத் ட்ரக் மூலம் டோ செய்து விட்டிருக்கிறார். கிட்டத்தட்ட 20 நாட்கள் விடப்பட்ட நிலையில் ஃபோக்ஸ்வேகன் சர்வீஸ் சென்டரில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது.
அப்போது உங்களுடைய கார் முழுவதுமாக சேதமாகிவிட்டது (total damage). சரி செய்வதற்கு ஆகும் செலவு இதுதான் எனக் கூறி 22 லட்சம் ரூபாய் என்றிருக்கிறார். இதனையறிந்த அனிருத், காரின் மொத்த விலையே 11 லட்சம்தான். ஆனால் அதனை சர்வீஸ் செய்ய 22 லட்சமா என ஆடிப்போனவர், இன்ஷுரன்ஸ் செய்த அக்கோ நிறுவனத்தை தொடர்பு கொண்டிருக்கிறார்.
ஆனால் இன்ஷுரன்ஸ் நிறுவனமோ அனிருத்தின் காருக்கு 6 லட்சம் ரூபாய் மட்டுமே காப்பீடு பெற முடியும் என்றிருக்கிறார்கள். ஆனால் சர்வீஸ் சென்டரில் இருந்து எஸ்டிமேஷன் பில் வாங்கி வந்தால் அதற்கேற்றார் போல க்ளெயம்(claim) செய்யலாம் என ஐடியா கொடுத்திருக்கிறார்கள்.
அதன்படியே அனிருத்தும் எஸ்டிமேஷன் பில் கேட்டு பெற்றிருக்கிறார். பொதுவாக இன்ஷுரன்ஸ் நிறுவனத்துக்கு கார் ஷோரூம்கள் எஸ்டிமேஷன் கொடுப்பதென்றார்ல் ரூ.5000க்குள்ளேயே முடிப்பதுதான் வழக்கம். அதில் என்ன ட்விஸ்ட் என்றால், எஸ்டிமேஷன் ஆவணத்திற்கு மட்டுமே 44,840 ரூபாய்க்கு ஃபோக்ஸ்வேகன் சர்வீஸ் சென்டர் பில் போட்டிருக்கிறது. இதுபோக காரை சர்வீஸ் சென்டரில் பார்க் செய்ததற்காக ஜி.எஸ்.டியோடு 4000 ரூபாயும் சேர்த்து பில் போட்டிருக்கிறார்கள்.
ஆகவே காரை டோட்டல் டேமேஜில் போட்டாலும் அந்த காரை மொத்தமாக பெற 45 ஆயிரம் ரூபாய் செலவிட்டால்தான் அவரால் இன்ஷுரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து அந்த 6 லட்ச ரூபாயை பெற முடியும் நிலை அனிருத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு மெயில் அனுப்பியும் முறையாக எந்த பதிலும் கிடைக்காததால் லிங்க்ட்இன் தளத்தில் பதிவிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் அனிருத் கணேஷ்.
அனிருத்தின் பதிவு ஃபோக்ஸ்ட்வேகன் இந்தியா நிர்வாகத்தின் கவனத்தை பெற்றதை அடுத்து, “5,000 ரூபாய் கட்டினாலே போதும்” என சொல்லியிருக்கிறார்களாம்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM