வாணிஸ்ரீயின் பலகோடி மதிப்புகள் சொத்துகள் மீட்பு
பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ. எம்.ஜி.ஆருடன் கண்ணன் என் காதலன், தலைவன், ஊருக்கு உழைப்பவன் படங்களில் நடித்தார். வசந்த மாளிகை, உயர்ந்த மனிதன், நிறைகுடம், குலமா குணமா, சிவகாமியின் செல்வன் படங்களில் சிவாஜி ஜோடியாக நடித்தார். அன்றைக்கிருந்த முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் நடித்தார். தமிழில் 40 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் இந்திய மொழிகள் அனைத்திலும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த ஆனூர் கிராமத்தில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது மகன் தற்கொலை செய்து கொண்டார்.
வாணிஸ்ரீக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து கொண்டு போலி ஆவணம் மூலம் அந்த இடத்தை விற்று விட்டார்கள். இது தொடர்பாக வாணிஸ்ரீ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். பல வருடங்களாக போராடியும் அந்த இடத்தை அவரால் மீட்க முடியவில்லை. தற்போது போலி ஆவணம் மூலம் செய்யப்பட்ட பத்திரபதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை அந்த துறைக்கு தமிழக அரசு வழங்கி இருப்பதால். அதன் பலன் வாணிஸ்ரீக்கு கிடைத்திருக்கிறது. இந்த திட்டத்தை நேற்று துவக்கி வைத்த முதல்வர் வாணிஸ்ரீயிடம் இதற்கான ஆணையை வழங்கினார். வாணிஸ்ரீயின் சொத்து மதிப்பு 10 கோடி என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து வாணிஸ்ரீ நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை நெல்சன் மாணிக்கம் ரோட்டில் எனக்கு சொந்தமாக 4 கிரவுண்ட் இடம் இருந்தது. அதில் வாணி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தேன். நஷ்டம் ஏற்பட்டதால் அந்த நிறுவனத்தை மூடிவிட்டேன். என்னிடம் நட்பாக பேசி பழகிய சிலர் எனக்குத் தெரியாமலேயே போலி ஆவணங்களை தயாரித்து அந்த இடத்தை தங்களுக்கு சொந்தமாக்கி கொண்டார்கள்.
அந்த இடத்தை மீட்க கடந்த 11 வருடங்களாக போராடி வருகிறேன். உச்சநீதிமன்றம் வரை சென்றேன். என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. இந்த கவலையிலேயே என் மகன் தற்கொலை செய்து கொண்டான். இப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் என் நிலம் எனக்கு திரும்ப கிடைத்து விட்டது. மு.க.ஸ்டாலினை எனது மகனாக பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.