தி.மு.க-வின் அமைப்புரீதியான உட்கட்சித் தேர்தல் நடைபெற்றுவருகிறது. இது தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான பெயர்ப் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. நெல்லை கிழக்கு மாவட்டத்துக்கு ஆவுடையப்பன், மத்திய மாவட்டத்துக்கு அப்துல் வஹாப் ஆகியோர் மீண்டும் தேர்வாகியுள்ளனர்.
தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளராக ஏற்கெனவே பொறுப்பு வகித்த சிவபத்மநாதன் மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழகத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டபோதிலும், வாசுதேவநல்லூர், கடையநல்லூர் தொகுதிகளை உள்ளடக்கிய தென்காசி வடக்கு மாவட்டத்துக்கு மட்டும் இன்னும் நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படவில்லை.
இது குறித்து செல்லத்துரை ஆதரவாளர்களிடம் பேசியபோது, “வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த செல்லத்துரை கட்சிக்காக வேகமாகச் செயல்படக்கூடியவர். கட்சித் தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரையும் அரவணைத்துச் செயல்படுபவர். அவர்மீது இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் வந்ததில்லை. அதனால் அவருக்கே மீண்டும் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படும் என்று நம்பியிருந்தோம்.
ஆனால், எங்கள் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு மனுவே தாக்கல் செய்யாத தனுஷ்குமாருக்குப் பொறுப்பு கொடுக்க பரிந்துரைத்திருக்கிறார். வெற்றிபெற்ற பிறகு தனுஷ்குமார் தென்காசி மாவட்டத்துக்குள் எட்டிப்பார்க்காதவர். அவரை மாவட்டச் செயலாளராக நியமிப்பதால் கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடும். அதை நாங்கள் ஒருபோதும் ஏற்க முடியாது” என்று குமுறுகிறார்கள்.
தனுஷ்குமார் மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்படவிருப்பதாகத் தகவல் வெளியானதும் அதிர்ச்சியடைந்த செல்லத்துரை ஆதரவாளர்கள் சென்னைக்குச் சென்று அறிவாலயத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் தி.மு.க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் பேசி நல்ல முடிவை எடுப்பதாகத் தெரிவித்தனர்.
இதற்கிடையே, தென்காசி மாவட்ட தி.மு.க நிர்வாகியான முத்துக்குமார் என்பவரின் மனைவி விஜய அமுதா என்பவர் தென்காசி அமர்வு நீதிமன்றத்தில், கட்சித் தேர்தல் தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு அடுத்த மாதம் 28-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதனால் கட்சித் தலைமை அதிருப்தியடைந்தது. ஆனால், அந்த வழக்குக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என செல்லத்துரை மறுத்திருக்கிறார்.
வழக்கு நிலுவையில் இருப்பதால் தென்காசி வடக்கு மாவட்டத்துக்கு நிர்வாகிகளை நியமிக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதனால் வழக்கை வாபஸ் வாங்குமாறு விஜய அமுதாவுக்கு தி.மு.க நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்ததாகத் தகவல். தனது வழக்கை வாபஸ் பெறுவதாக விஜய அமுதா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அதன் முடிவு வந்த பின்னரே தென்காசி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.