‘தி தாஷ்கன்ட் ஃபைல்ஸ்’, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ போன்ற படங்களை இயக்கியவர் விவேக் அக்னிஹோத்ரி. அவர் அடுத்தாக இயக்கப் போகும் படம் ‘டெல்லி ஃபைல்ஸ்’.
இவர் சமீபத்தில், “பாலிவுட் திறமைகளைப் புதைக்கும் கல்லறையாக இருக்கிறது. நீங்கள் பார்ப்பது உண்மையான பாலிவுட் அல்ல. உண்மையான பாலிவுட்டின் பக்கங்கள் இருளால் நிறைந்தது. இதைச் சாமானிய மக்களால் புரிந்துகொள்ள முடியாது” என்று பேசியது பேசுபொருளானது. இதனைத் தொடர்ந்து அவர் தற்போது நெப்போட்டிசம் குறித்துப் பேசியிருக்கிறார். அவர் கலந்துகொண்ட நேர்காணலில் நெப்போட்டிசம் குறித்துக் கேட்கப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலளித்த அவர், “பாலிவுட்டில் 2000-த்துக்கு முன்பெல்லாம் நெப்போட்டிசம் கிடையாது. ஏனென்றால் பெரும்பாலானோர் சினிமா பின்புலம் இல்லாமல் வந்து பெரிய நட்சத்திரங்களாக உருவானவர்கள். உதாரணம் தர்மேந்திரா, ஜிதேந்திரா, ராஜேஷ் கண்ணா, வினோத் கண்ணா, அமிதாப் பச்சன், கோவிந்தா, சத்ருகன் சின்ஹா என எல்லோரும் சினிமா பின்புலம் இல்லாதவர்கள்தான். ஆனால் 2000-த்துக்கு பின் பெரிய நட்சத்திரங்களாக மாறியவர்களின் குழந்தைகள் சினிமாவிற்குள் நுழைய ஆரம்பித்தனர். பின்னர் அது ஒரு மாஃபியாவாக மாறிவிட்டது. பாலிவுட் குடும்பங்களைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றவர்களுக்கான கதவுகளை மூடிவிட்டனர்” என்று விவேக் அக்னிஹோத்ரி பேசியிருக்கிறார்.