முன்னாள் டிஜிபியும், தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியுமான திலகவதி மீதும் அவரது மகன் மீதும் மருமகள் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தன்னை கொடுமை படுத்தியதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் அளித்த பேட்டியை ஜீ தமிழ் நியூஸ் சேனலில் ஒளிபரப்பி இருந்தோம். ஒரு தரப்பின் பேட்டியை மட்டும் ஒளிபரப்பியதை அடுத்து திலகவதி ஐபிஎஸ் தரப்பில் இந்த குற்றச்சாட்டு குறித்து என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முயற்சித்தோம். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. அதுக்குறித்து விரிவாக பார்ப்போம்.
தமிழக முன்னாள் போலீஸ் அதிகாரியான திலகவதி ஐபிஎஸ் மகன் தான் பிரபு திலக். மருத்துவரான இவர் ஒருசில படங்களையும் தயாரித்து வருகிறார். இவரது மனைவி தான் ஸ்ருதி. கடந்த 2007-ம் ஆண்டு இவர்கள் திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நன்றாக சென்றுகொண்டிருந்த குடும்ப வாழ்க்கையில் திடீரென இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தான் கணவர் பிரபு திலக் மீது ஸ்ருதி அடுக்ககடுக்கான புகார்களை தெரிவித்துள்ளார். ஸ்ருதி அளித்த தனது புகாரில், பல பெண்களுடன் பிரபு தொடர்பில் உள்ளதாகவும், தன்னை கொடுமை படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளர். மேலும் சேலம் மாநகரக காவல் ஆணையாளர் அலுவலகத்தில் அளித்த புகாரில், திலகவதியும், அவரது மகனும் தன்னிடமிருந்து 170 சவரன் நகை எடுத்துக்கொண்டதாகவும், தனது தந்தையிடமிருந்து 1 கோடி ரூபாயை வாங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உண்மை என்ன என்பதை அரிய திலகவதி ஐபிஎஸ்-க்கு நெருங்கியவர்களை தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர்கள் தரப்பில் இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்தனர்.
இதுகுறித்து பேசிய ஒருவர், “திலகவதியின் 70-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. அதற்காக அவரது மகன் பிரபு திலக் “பீமா ரத்னா சாந்தி” என்னும் விழாவை ஏற்பாடு செய்திருந்தார். கடந்த சனிக்கிழமை இரவு வரை வீட்டில் இயல்பாக தான் ஸ்ருதி இருந்தார்.
அடுத்தநாள் காலை தனது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லாததை அறிந்த பிரபு திலக், உடனடியாக தனது மனைவிக்கு போன் செய்துள்ளார். ஆனால் பிரபு திலக்கின் அழைப்பை அவர் எடுக்கவில்லை. பிறகு அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி-ஐ பார்க்கும் போது சனிக்கிழமை நள்ளிரவே ஸ்ருதி தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு 4 முதல் 5 சூட்கேஸ்களுடன் வீட்டில் இருந்து வெளியேறியது தெரியவந்தது. ஒருவழியாக தனது மனைவி ஸ்ருதியிடம் பிரபு திலக் பேசியபோது அவர் சரியாக பேசவில்லை. வேறுவிதமாக மோசமாக பேசியுள்ளார்.
புகார் அளிக்க வேண்டும் என்றால் திங்கட்கிழமையே அளித்திருக்கலாம். ஆனால் இன்று நடக்கும் திலகவதியின் 70-வது பிறந்தநாள் விழாவை கெடுப்பதற்காகவே திட்டமிட்டு நேற்று கொடுத்துள்ளார். அவருடையை நகைகள் மற்றும் திலகவதியின் நகைகளையும் சேர்த்து எடுத்து கொண்டு சென்றுவிட்டார். அதோடு வீட்டில் இருந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். மருத்துவராக இருக்கும் ஒருவர் தன்னுடன் வேலை செய்யும் பெண்களுடன் பழகுவது தவறா? அதற்காக அவர்களுடன் தொடர்பு என்று பேசுவதா? பலமுறை நானே பார்த்திருக்கிறேன், வீட்டில் இருக்கும் பொருட்களை போட்டு உடைப்பதை ஸ்ருதி வழக்கமாகவே வைத்திருந்தார். பணத்தையும் இஷ்டத்துக்கு செலவு செய்வார் எனவும் அந்த நபர் தெரிவித்தார்.
நம்மிடம் தொடர்ந்து பேசிய அவர், ஆனால் குழந்தைகளுக்காக வீட்டில் அனைவரும் பொருமையாக இருந்தனர். இப்போது இப்படி பேட்டி கொடுத்து அவர்களை மன உளைச்சலுக்கு தள்ளி உள்ளார். நான் திலகவதியிடம் நீங்கள் இதனை மறுத்து அறிக்கை வெளியிடுங்கள் என்றேன். ஆனால் அவரோ மிகவும் வேதனையில் உள்ளார். அதோடு குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் எனக் கூறிவிட்டார்” என்று நம்மிடம் பேசிய நபர் தெரிவித்தார். மேலும் தனது பெயரை பொதுவெளியில் சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதால், நமக்கு இந்த தகவல்களை அளித்தவரின் பெயரை வெளியிடவில்லை.
இருதரப்பினரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். குடும்ப சண்டை காவல் நிலையம் வரை சென்றதால் இந்த விவகாரம் இவ்வளவு பரபரப்புக்கும் காரணமாக அமைந்துள்ளது. உண்மை என்ன என்பது காவல்துறை விசாரணையின் முடிவில் தான் தெரியவரும்.