காந்தி ஜெயந்தி அன்று ஊர்வலம் நடத்தினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் மனுதாரர் வேறு ஒரு நாளில் ஊர்வலத்தை நடத்திக் கொள்ளலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த பிரபுநாதன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், “வருகின்ற அக்டோபர் மாதம் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு அனைத்து செட்டியார்கள் பேரவை சார்பில் காந்தி ஜெயந்தி விழாவை கொண்டாடும் விதமாக ஊர்வலம் நடத்தி பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழாவினை ஏற்பாடு செய்துள்ளோம். ஆகவே இந்த ஊர்வலத்தையும், பரிசளிக்கும் விழாவையும் நடத்த உரிய அனுமதி கோரி போடிநாயக்கனூர் நகர்புற காவல் ஆய்வாளரிடம் 12.09.2022 அன்று மனு அளித்தோம். ஆனால் எங்கள் மனு குறித்து எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை.
எனவே ஊர்வலம் மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு பரிசளிக்கும் விழாவினை நடத்தவும் உரிய பாதுகாப்பு வழங்கவும் அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று ஊர்வலம் நடத்தினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே, மனுதாரர் வேறு ஒரு நாளில் ஊர்வலத்தை நடத்திக் கொள்ளலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.