அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை பிரச்னை நீடித்து வரும் நிலையில், அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ் தாக்கல் செய்த முறையீட்டு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தடை விதிக்கப்படுகிறது. பொறுப்பில் இருக்கும்போது தேர்தல் நடத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு ஏன் அவசரப்படுகிறது? மேலும் தசரா விடுமுறைக்குப் பிறகு இந்த வழக்கு விசாரிக்கப்படும். அப்போது இ.பி.எஸ் தரப்பு பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.
பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுவதற்கு 15 நாள்களுக்கு முன்பு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். ஆனால் அது கொடுக்கப்படவில்லை. அ.தி.மு.க-வின் அனைத்து பதவிகளையும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் நியமிக்க முடியும். அ.தி.மு.க பொதுக்குழு கூட்டப்பட்டதே விதிமுறைகளுக்கு எதிரானது என ஓ.பி.எஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஓ.பி.எஸ் மேல்முறையீடு மனுவை விசாரித்து தீர்ப்பு அளிக்கும்வரை பொதுச்செயலாளருக்கான தேர்தல் நடைபெறாது என உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.
இ.பி.எஸ் தரப்பு அடுத்த 3 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.