புதுடெல்லி: ” உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், பொதுச் செயலாளர் பதவிக்கான முன்னேற்பாட்டு பணிகளையோ, அதுதொடர்பான அறிவிப்பையோ இதுவரை செய்யவில்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” ஓபிஎஸ் தரப்பில், பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது எங்களது தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவலையில் இருப்பதால், பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கான எந்த முன்னேற்பாடு பணிகளையே, அதுதொடர்பான அறிவிப்பையோ வெளியிடவில்லை” என்று தெரிவித்தோம். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.
எங்களைப் பொருத்தவரை, அதிமுக பொதுக்குழுவிலோ, நீதிமன்றத்திலோ பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்துவதற்கான எந்த தடையும் இல்லை. இன்றுவரை இந்த நிமிடம் வரை எந்த தடையும் இல்லை. சட்டத்துக்குட்பட்டு நடக்க வேண்டும் என்பதற்காகவே, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதால் இறுதி தீர்ப்பு வந்தவுடன் தேர்தலை அறிவிக்கலாம் என்ற காரணத்தால்தான், தேர்தல் குறித்து இதுவரை அறிவிக்கவில்லை” என்று அவர் கூறினார்.