சாய்பாசா, ஜார்க்கண்டில், பள்ளி மாணவியரிடம் ஆபாச ‘வீடியோ’ காட்டிய ஆசிரியர் முகத்தில் கறுப்பு மை பூசி, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மேற்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள நோவாமண்டி கிராமத்தின் பள்ளி ஆசிரியர் ஒருவர், மாணவியரிடம் ஆபாச வீடியோக்களை காட்டியுள்ளார். மேலும், மாணவியரை தொட்டு சில்மிஷம் செய்துள்ளார். இது குறித்து மாணவியர் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
அவர்கள் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம பெண்கள், ஆசிரியரை தண்டிக்க முடிவெடுத்தனர்.இதையடுத்து ஆசிரியரை பிடித்து வந்த பெண்கள், அவரது முகத்தில் கறுப்பு மை பூசி, கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து, பள்ளியில் இருந்து அருகில் உள்ள ரயில் நிலையம் வரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். தகவலறிந்த போலீசார், அங்கு வந்து ஆசிரியரை மீட்டு அழைத்துச் சென்றனர். ஆனால், பெண்கள் போலீஸ் ஸ்டேஷன் முன் திரண்டு, ஆசிரியரை சிறையில் அடைக்கக் கோரி போராட்டம் நடத்தினர். பின்னர், இன்ஸ்பெக்டர் பெண்களிடம் சமாதானம் பேசி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின், பெண்கள் கலைந்து சென்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement