காபூல் :ஆப்கானிஸ்தானில் கல்வி மையத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில், மாணவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர்; 27 பேர் காயம் அடைந்தனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே மனித வெடிகுண்டு தாக்குதல், துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
தலைநகர் காபூலில் தஷ்டி பர்சி பகுதியில், அந்நாட்டின் சிறுபான்மையினரான ஹஸாராஸ் எனப்படும் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இங்கு, உயர் கல்வி மையம் ஒன்று உள்ளது. போட்டி தேர்வுகளுக்கு தயார் ஆகும் மாணவர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை மாணவ – மாணவியர் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். பயிற்சி வகுப்புகள் நடந்து கொண்டிருந்த போது, மையத்திற்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
இதில், பலர் உடல் சிதறி உயிரிழந்தனர். மாணவர்கள் சிதறி ஓடினர்.போலீசார் வந்து உடல்களை மீட்டபோது, மாணவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தது தெரிய வந்தது. காயம் அடைந்த 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.ஆனாலும், இதற்கு ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் சதி செயல் தான் காரணம் என, அதிகாரிகள் உறுதியாக தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement