ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு மீண்டும் அனுமதி; காவல் துறைக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்

ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழ்நாடு முழுவது பல்வேறு இடங்களில் அக்.2ஆம் தேதி அன்று அணிவகுப்பு ஊர்வலம் நடத்த திட்டமிட்டது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில், ஊர்வலத்திற்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதைத்தொடர்ந்து, சட்டம் ஒழுங்கை காரணமாக கூறி, வரும் அக்.2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதியளிக்க இயலாது என காவல் துறை அறிவித்தது. இதைத்தொடர்ந்து, அணிவகுப்புக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து, ஆர்எஸ்எஸ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடத்தப்பட்டது. 

அதில், ஆர்எஸ்எஸ் தரப்பு,”எங்களின் அணிவகுப்புக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிஎப்ஐ அமைப்பு தடை செய்யப்பட்டபோதும் கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என வாதிட்டது.

அதற்கு காவல் துறை தரப்பில்,”மத்திய- மாநில உளவு அமைப்புகளின் எச்சரிக்கையை அடுத்து ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அமைச்சர் தலைமையில் நடக்க இருந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் காரணமாக வடக்கு மண்டலத்தில் 402 வீடுகள், 43 கட்சி அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு என மொத்தம்  59 ஆயிரத்து 144 போலீசார் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடக்கும் வழிகளில் தேவாலயங்கள், மசூதிகள் உள்ளன. பிஎப்ஐ தடையை தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து 70 உளவு அறிக்கைகள் உள்ளன. ஊர்வலத்திற்காக மக்கள் ரத்தம் சிந்த வேண்டுமா” என வாதிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, வரும் நவ.6ம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பு ஊர்வலம் நடத்த காவல் துறை அனுமதிக்க அளிக்க வேண்டும் என அனுமதி வழங்க மறுத்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆர்எஸ்எஸ் தரப்பின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அக்டோபர் 31ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.