இந்தியாவில் முதன்முறையாக போதைப்பொருள் தடுப்பு பிரிவால் ப்ளாக் கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பிரேசிலில் இருந்துவந்த வெளிநாட்டவர் ஒருவரிடமிருந்து மும்பை விமான நிலையத்தில் 3.20 கிலோ ப்ளாக் கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு ரூ.13 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ப்ளாக் கொக்கைன் என்பது வழக்கமான கொக்கைனுடன் சில வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டிருப்பது. இப்படி ரசாயனம் ஏற்றப்பட்ட கொக்கைனை விமான நிலைய பரிசோதனையில் டிடெக்ரடாலோ அல்லது மோப்ப நாய்களாலோ கண்டறியமுடியாது. இதுபோன்ற போதைபொருள் இந்தியாவில் பறிமுதல் செய்யப்பட்டது இதுதான் முதன்முறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூன்று நாட்கள் தொடர் கண்காணிப்பிற்கு பிறகு போதைப்பொருள் விற்பனையாளர் மற்றும் வாங்குபவர் இருவரையும் அதிகாரிகள் பிடித்துள்ளனர்.
மும்பை விமான நிலையத்தில் பொலிவியப் பெண்ணிடம் இருந்து NCB போதைப் பொருளைக் கைப்பற்றியது. மேலும் அதே வழக்கில் தொடர்புடைய ஒரு நைஜீரிய நாட்டவரையும் கோவாவில் வைத்து கைது செய்துள்ளனர்.
மும்பை வழியாக போதைப்பொருள் கொடுக்கல் வாங்கல் கைமாறு நடக்கவிருப்பதாக இந்திய அதிகாரிகளுக்கு தென் அமெரிக்க அதிகாரிகள் கொடுத்த தகவலின்படி மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் பரிசோதனைகள் பலப்படுத்தப்பட்டது.
போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், ’’26/09/2022 அன்று மும்பையில் விமானம் தரையிறங்கியதும் இங்கிருந்து கோவா செல்லும் விமானத்தில் ஏறமுயன்ற பொவிலிய பெண்ணிடம் எதற்காக இங்கு வந்துள்ளீர்கள் என பலமுறை கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் கொண்டுவந்த லக்கேஜ் மற்றும் அவர் வந்ததற்காக காரணம் குறித்து முறையான பதிலளிக்கவில்லை. அதன்பிறகு அவரது பையை சோதனையிட்டபோது, அதில் இறுக்கமாக கட்டப்பட்ட 12 பாக்கெட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர். அதனை சோதனையிட்டபோது அதில் கருப்புநிற பொடி போன்ற பொருள் இருந்ததை கண்டறிந்தனர்.
அதுகுறித்து அந்த பெண்ணிடம் தொடர் கிடுக்குப்பிடி கேள்விகள் எழுப்பப்பட்டதில், அது ப்ளாக் கொக்கைன் என்று அந்த பெண் தெரிவித்துள்ளார். அந்த பெண்மூலம் நைஜீரியாவைச் சேர்ந்த அந்த நபரையும் போதைப்பொருள் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM