பீகார் மாநிலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ‘அதிகாரம் பெற்ற மகள்கள், வளமான பீகார’ என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மகளிர் மற்றும் குழந்தைகளு மேம்பாட்டு நிறுவன இயக்குநர ஹர்ஜோத் கவுர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவிகள் ஐஏஎஸ் அதிகாரியிடம் கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் கேட்டனர். அதில் ஒரு மாணவி, “அரசு நிறைய இலவசங்களை அளித்து வருகிறது. ஆனால் எங்களுக்கு சானிட்டரி நாப்கின்களை ரூ.20 முதல் 30 ரூபாயில் ஏன் வழங்க முடியவில்லை? என்று கேள்வி கேட்டார்.
இதற்கு பதில் அளித்த அதிகாரி ஹர்ஜோத் கவுர், “நீங்கள் இன்று சானிட்டரி நாப்கின் கேட்பீர்கள். நாளை ஷூ வேண்டும், ஜீன்ஸ் பேண்ட் வேண்டும் என்பீர்கள். இறுதியாக குடும்ப கட்டுப்பாடு என்று இலவச ஆணுறை அரசு தர வேண்டும் என்பீர்கள். இந்த எண்ணம் தவறானது” என்று அந்த மாணவிக்குப் பதிலளித்தார்.
அந்த வீடியோவில், ஐ.ஏ.எஸ் அதிகாரி கவுரை நோக்கி பேசிய மாணவி ஒருவர் அதன்பின்னர் கூறியிருப்பதாவது, “எனது கேள்வி தவறாக இல்லை. நாப்கின்கள் பெரிய விஷயம் இல்லை; என்னால் அதை வாங்க முடியும். ஆனால், பலர் சேரிப் பகுதிகளில் வாழ்கிறார்கள் மற்றும் அவர்களால் நாப்கின்கள் வாங்க முடியாது. நான் எனக்காக மட்டுமல்ல, எல்லா பெண்களுக்காகவும் கேள்வி கேட்டேன். நாங்கள் அங்கு எங்கள் கவலைகளை தெரிவிக்கவே சென்றோம், சண்டையிட செல்லவில்லை” என்றார்.
இதன்பின்பு கவுர் வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில், “எனது வார்த்தைகள் எந்த பெண்ணின் மனதையும் புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நான் யாரையும் அவமானப்படுத்தவோ, யாருடைய மனதையும் புண்படுத்தவோ விரும்பவில்லை” என தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியதாவது, “இந்த பிரச்சினை குறித்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.