நாடு முழுவதும் இரண்டு குழந்தை கொள்கைகளை அமல்படுத்த தங்களால் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் இது கொள்கை முடிவு சார்ந்த விஷயம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சிய சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியாயா என்பவர் தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது “இந்த விவகாரத்தை நீதிமன்றம் எவ்வாறு நடைமுறைப்படுத்த முடியும்?” என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மனுதாரர், “குடியரசு தின உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி கூட இதனை வலியுறுத்தி பேசியுள்ளார். மேலும் சில ஆணையங்கள் கூட இத்தகைய விவகாரத்தை கையாண்டிருக்கின்றது” எனக் கூறினார்.
“சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றது. அவை அனைத்தையும் பொதுநல மனுக்களை மட்டும் தாக்கல் செய்து சரி செய்து விட முடியாது.” எனக் கூறிய நீதிபதிகள் இந்த விவகாரத்தில் மனுதாரர் வைக்கக்கூடிய வாதங்கள் என்பது திருப்திகரமாக இல்லை என தெரிவித்தனர்.
அப்பொழுது மனுதாரர் சார்பில் இந்த விவகாரத்தில் அனைத்து மாநில அரசுகளின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி முதலில் இந்த விவகாரத்தை நாங்கள் தொடர்ந்து ஏன் விசாரிக்க வேண்டும் என்ற சரியான காரணத்தை கூறுங்கள் எனக்கூறி வழக்கு விசாரணையை அக்டோபர் இரண்டாம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
ஏற்கனவே உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்பவர்களுக்கு அரசின் வரிச்சலுகை உள்ளிட்டவை வழங்கப்படாது என்ற சட்ட திருத்தத்தை கொண்டு வருவதற்கான வரைவு தயாரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM