மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கைப்பற்றப்பட்ட லுஹான்ஸ்க் உள்ளிட்ட 4 நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவி செய்து வருகின்றன. 6 மாதங்களைத் தாண்டி போர் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, போர் மூலம் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட உக்ரைனின் லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொள்ள ரஷ்யா திட்டமிட்டது. இது தொடர்பாக அப்பகுதியில் ரஷ்ய அதிகாரிகள் பொது வாக்கெடுப்பையும் நடத்தினர்.
ஏற்கெனவே கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை ஆக்கிரமித்த ரஷ்யா, பின்னர் வாக்கெடுப்பு நடத்தி தன்னுடன் இணைத்துக்கொண்டதை போல் இந்த நகரங்களையும் தங்களுடன் இணைக்க ரஷ்ய மேற்கொண்ட முயற்சிக்கு உக்ரைனும் மேற்கத்திய நாடுகளும் கடும் கண்டனங்களை தெரிவித்தன.
எனினும், தற்போது இந்த நகரங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டுவிட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று அறிவித்துள்ளார். கிரெம்ளினில் நிகழ்த்திய உரை ஒன்றில், ரஷ்யா உடன் நான்கு புதிய பகுதிகள் இணைந்துள்ளன என்று தெரிவித்து உக்ரைன் நகரங்கள் இணைக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்.