சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகள் பல்வேறு கொலைகள் மற்றும் பயங்கரவாதத்தில் ஈடுபட்ட காரணத்தினால் தான் மத்திய அரசு தடை செய்துள்ளது.
தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பது தண்டனைக்குரிய குற்றம். கடந்த 1991ல் அரசு தகவல்களை விடுதலை புலிகள் இயக்கத்திற்கு கசிய விட்டதால் தான் திமுக அரசு கலைக்கப்பட்டது.
PFI இயக்கத்திற்கு ஆதரவாக பேசி வரும் திருமாவளவன், சீமான் ஆகியோர் தேசத்துரோகிகள். ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை என்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். டிஜிபி நீதித்துறைக்கு தலைவணங்க வேண்டும்.
டிஜிபி சைலேந்திர பாபு தமிழக அரசிடம் சம்பளம் வாங்குகிறாரா இல்லை? பிஎஃப்ஐயிடம் சம்பளம் வாங்குகிறாரா? மோடியும், ஆர்எஸ்எஸ்சும் இல்லை என்றால் இந்தியா கொரோனாவில் செத்திருக்கும் என்பதை டிஜிபி சைலேந்திரபாபு உணர வேண்டும்.
மத்திய உளவுத்துறை அறிக்கையில் தமிழ்நாட்டை பற்றி கூறப்பட்டுள்ளது. அரசை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றால் தேசவிரோத தடுப்பு நடவடிக்கைகளில் திருமாவளவன், சீமான் இருவரையும் கைது செய்ய வேண்டும். இவ்வாறு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார்.
இதற்கிடையே தமிழ்நாடு போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபுவை அவமதித்து பேசியதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது, காரைக்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் தமிழக அரசுக்கு திடீரென கெடு விதித்து இருக்கும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செயலால் தமிழக முதல்வர் ஸ்டாலின் டென்ஷன் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.