ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் கடந்த 11-ம் தேதி, தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அங்கு , பா.ஜ.க., சார்பில் திருநெல்வேலி எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனின் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி, முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா உள்ளிட்ட கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். அதில், பொன் பாலகணபதி சசிகலா புஷ்பாவிடம் பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ வெளியானதற்கு பின்புலத்தில், ராமநாதபுரம் பா.ஜ.க., மாவட்டத் தலைவர் கதிரவன் இருப்பதாக தகவல் கிடைத்தது. இது குறித்து பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர் கதிரவனிடம் விளக்கம் கேட்டு, கடந்த 21-ந் தேதி தேதியிட்ட ‘ஜூனியர் விகடன்’ இதழில் செய்தி வெளியானது.
இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி ராமநாதபுரத்தில் பா.ஜ.க ஆதரவாளரின் காருக்கு பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக பா.ஜ.க சார்பில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவினர் வந்திருந்தனர். அந்தக் குழுவில், சசிகலா புஷ்பா மற்றும் பொன் பாலகணபதியும் இடம் பெற்றிருந்தனர்.
அங்கு செய்தி சேகரிப்பதற்காக, ராமநாதபுரம் மாவட்ட விகடன் நிருபர் விவேக்ராஜ் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பா.ஜ.க மாவட்டத் தலைவர் கதிரவன், அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து ‘ஜூனியர் விகட’னில் வெளியான செய்தியைச் சுட்டிக்காட்டி, “என்னைப் பத்தியே செய்தி போடுவியால? வெள்ளை வேட்டி, சட்டையில இருக்கேன்னு நினைக்கியா? உன்னைக் கொன்னுடுவேன்ல. உன்னோட கையையும் காலையும் உடைச்சிடுவேன்ல. உம் மேல கிரிமினல் வழக்கு போட வைப்பேன்ல” என பொதுவெளியில் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். அவருடன் இருந்த பாலா என்ற நபரும் மிரட்டும் தொணியில் பேசியுள்ளார்.
ஒரு தேசியக் கட்சியில் மாவட்ட தலைவராக இருப்பவர் தன்னை பற்றி செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளரை பகிரங்கமாக பொது வெளியில் கொலை மிரட்டல் விடுத்ததை பார்த்து அங்கிருந்த போலீஸார் மற்றும் செய்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் பா.ஜ.க மாவட்ட தலைவர் கதிரவன் மீது விகடன் செய்தியாளர் விவேக்ராஜ், ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.