உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியர்கள் அதிகம் சேமிக்கும் பழக்கத்தைக் கொண்டவர்கள் என்பது எப்போதுமே பெருமிதமான விஷயம். இதனால்தான் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார நெருக்கடியை நினைத்து அச்சத்தில் இருந்தாலும் இந்தியா அசால்ட்டாக இருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்த தாஸும் உலக நாடுகள் முழுக்க பொருளாதார நெருக்கடி வந்தாலும் அதை சமாளிக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது என்று கூறியுள்ளார். இவ்வளவு நம்பிக்கையுடன் இருக்க முக்கிய காரணம் இந்திய மக்களின் சேமிப்பு.
தொடர்ந்து மக்களின் சேமிப்பு ஊக்குவிக்க மத்திய அரசு முயற்சித்துவருகிறது. அந்தவகையில் தற்போது சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டியை உயர்த்தி உள்ளது. என்னென்ன சேமிப்பு திட்டங்களுக்கு எவ்வளவு வட்டி உயர்த்தப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வுக்குட்படுத்துவது வழக்கம். அப்போதைய பொருளாதார சூழலின் அடிப்படையில் வட்டியை குறைக்கவோ அதிகரிக்கவோ செய்யும். தற்போது பணவீக்கம் கட்டுக்குள் இல்லாமல் தொடர்ந்து உயர்ந்துவருவதால் ரிசர்வ் வங்கி தொடர்ந்து கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது.
மே மாதத்திலிருந்து இதுவரை 1.9 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மறுபக்க விளைவாக சேமிப்புகளுக்கான வட்டியை உயர்த்த வேண்டிய கட்டாயமும் உருவாகும். அந்தவகையில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வட்டி உயர்வு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களுக்குப் பொருந்தும். ஒரு வருட சேமிப்புக்கான வட்டியில் மாற்றமில்லை. 2 ஆண்டு சேமிப்புகளுக்கு வட்டி 5.5 சதவிகிதத்திலிருந்து 5.7 சதவிகிதமாகவும் 3 ஆண்டுகால டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 5.5 சதவிகிதத்திலிருந்து 5.8 சதவிகிதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மூத்தகுடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி 7.4 சதவிகிதத்திலிருந்து 7.6 சதவிகிதமாக உயர்த்தி உள்ளது.
மாதந்திர வருவாய் சேமிப்பு திட்டத்தின் வட்டி 6.6 சதவிகிதத்திலிருந்து 6.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 123 மாதங்கள் சேமிக்கும் கிசான் விகாஸ் பத்திரத்தின் வட்டி 6.9 சதவிகிதத்திலிருந்து 7.0 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கூடவே விவசாயிகள் கடன் அட்டைக்கான கால வரம்பும் வட்டி விகிதமும் மாற்றப்பட்டுள்ளது.
பிபிஎஃப், சுகன்யா சம்ரித்தி திட்டம் போன்ற திட்டங்களின் வட்டி முறையே 7.1 சதவிகிதம், 7.6 சதவிகிதம் என மாற்றமின்றி தொடர்கின்றன.
அதேபோல் ஓராண்டு, ஐந்தாண்டு கால வைப்பு திட்டங்களின் வட்டி 5.5 சதவிகிதமாக மாற்றமின்றி தொடர்கிறது. ஓராண்டு, ஐந்தாண்டு தொடர் வைப்பு திட்டத்தின் வட்டியும் 6.7 சதவிகிதமாக மாற்றமில்லாமல் தொடர்கிறது.
கடன்களின் இஎம்ஐ அதிகரிக்கும்
அதேசமயம் ரிசர்வ் வங்கி கடன்களுக்கான வட்டியை உயர்த்தியதால் வீட்டுக் கடன், கார் கடன், தொழில் கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட குறுகிய மற்றும் நீண்டகால கடன்களின் வட்டி அதிகரிக்கும். இது கடன்தாரர்களுக்கு கூடுதல் நிதி சுமையை உண்டாக்கும்.