திருவனந்தபுரம்,
திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் 4-வது வரிசையில் களம் கண்ட இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 33 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் திரட்டி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
கடைசி வரை நிலைத்து நின்று அசத்திய சூர்யகுமார் யாதவ் சர்வதேச 20 ஓவர் போட்டியில் ஒரு ஆண்டில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். அவர் இந்த ஆண்டில் இதுவரை 732 ரன்கள் (21 ஆட்டங்கள்) குவித்து இருக்கிறார். இதற்கு முன்பு இந்திய வீரர்களில் ஷிகர் தவான் 2018-ம் ஆண்டு 689 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை சூர்யகுமார் யாதவ் தகர்த்தார்.
அத்துடன் சர்வதேச 20 ஓவர் போட்டியில் ஒரு ஆண்டில் அதிக சிக்சர் நொறுக்கிய வீரர் என்ற மகத்தான சாதனையையும் சூர்யகுமார் யாதவ் சொந்தமாக்கினார். அவர் இந்த ஆண்டில் இதுவரை 45 சிக்சர்கள் விளாசி இருக்கிறார். இதற்கு முன்பு கடந்த ஆண்டு (2021) பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 42 சிக்சர் (26 இன்னிங்சில்) விரட்டியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை சூர்யகுமார் தனது 21-வது இன்னிங்சிலேயே முறியடித்து இருக்கிறார்.
மும்பையை சேர்ந்த 32 வயதான சூர்யகுமார் யாதவ், 20 ஓவர் பேட்ஸ்மேன் தரவரிசையில் சமீபத்தில் 2-வது இடத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.