பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.
5 போட்டிகளின் முடிவில் பாகிஸ்தான் அணி 3-2 என முன்னிலை வகித்த நிலையில், 6-வது டி20 போட்டி வெள்ளிக்கிழமை லாகூரில் நடைபெற்றது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 6-வது டி20 போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து 3-3 என்ற கணக்கில் இந்த தொடரை சமன் செய்துள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான் ஆடாததால் அறிமுக வீரர் முகமது ஹாரிஸ், பாபர் அசாம் இருவரும் தொடக்க ஆட்டக்கார்களாக களமிறங்கினர்.
ஹாரிஸ் 7 ஓட்டங்களுக்கு, ஷான் மசூத் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அவர்களையடுத்து ஹைதர் அலி 18 ஓட்டங்களும், இஃப்டிகார் அகமது 31 ஓட்டங்களும் அடித்தனர். ஆசிஃப் அலி 9 ஓட்டங்கள் மட்டுமே அடித்தார்.
ஒருமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ, மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய கேப்டன் பாபர் அசாம் அரைசதம் அடித்தார். தொடக்கம் முதலே பொறுப்புடன் ஆடிய பாபர் அசாம் அரைசதம் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்கள் குவித்தது.
59 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 87 ஓட்டங்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் பாபர் அசாம்.
இதையடுத்து 170 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் களமிறங்கினர்.
தொடக்கம் முதலே அதிரடி காட்டிய ஹேல்ஸ் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் 12 பந்துகளில் 27 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பின்னர் சால்ட் உடன் மலான் ஜோடி சேர்ந்தார். ஒருபுறம் மலான் நிலைத்து நின்று விளையாட மறுபுறம் சால்ட் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து அரைசதம் கடந்தார்.
இங்கிலாந்து அணி 9.3 ஓவர்களில் 128 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மலான் 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதை தொடர்ந்து பென் டக்கெட்- பில் சால்ட் ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
இறுதியில் இங்கிலாந்து அணி 14.3 ஓவர்களில் 170 ஓட்டங்கள் அடித்து எளிதாக வெற்றி பெற்றது.
பில் சால்ட் 41 பந்துகளில் 87 ஓட்டங்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3-3 என்ற கணக்கில் இந்த தொடரை சமன் செய்துள்ளது.
தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 7-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
Images: AFP/Getty