வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையில், ‛தீர்ப்பு வெளியாகும் வரை அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த மாட்டோம்’ என எடப்பாடி பழனிசாமி தரப்பு உத்தரவாதம் அளித்தது. மேலும் இந்த வழக்கில் பழனிசாமி பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி தலைமையில், ஜூலை 11ல் அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. இது தொடர்பாக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, 11ல் நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து பழனிசாமி மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி நீதிபதி அளித்த தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து பழனிசாமி இடைக்கால பொதுச்செயலராக தொடர்கிறார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று (செப்.,30) விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், ‛பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். ஆனால் அது தவறப்பட்டுள்ளது. கட்சிக்கு தேவையான அனைத்தையும் செய்ய தயாராக இருந்தேன். ஆனால் என்னை வேண்டாம் என வெளியே தள்ளி முடிவு எடுத்துள்ளனர். அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது கட்சியின் விதிமுறைகளுக்கு எதிரானது. இதை டிவிசன் பெஞ்ச் கணக்கில் கொள்ளவில்லை’ என வாதிட்டார்.
இதனையடுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‛இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பில் இருக்கும்போது அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவதற்கு பழனிசாமி தரப்பு ஏன் அவசரப்படுகிறது?’ என கேள்வி எழுப்பியது. இதனால், வழக்கின் தீர்ப்பு முடியும் வரை தேர்தலை நடத்த மாட்டோம் என பழனிசாமி தரப்பு உத்தரவாதம் அளித்தது. இதனைத்தொடர்ந்து தசரா விடுமுறைக்கு பிறகு வழக்கை விசாரிக்கலாம் என கூறிய உச்சநீதிமன்றம், இவ்வழக்கு தொடர்பாக பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டு, நவ.,21ல் இறுதி விசாரணைக்கு உத்தரவிட்டது.
சண்முகம்
வழக்கு விசாரணை தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர் சண்முகம் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் பழனிசாமி இடைக்கால பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில், தசரா விடுமுறை காலத்திற்கு பிறகு இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் முழுமையாக விசாரிக்கிறோம் என உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் தான் நாங்கள் (இபிஎஸ் தரப்பு) பொதுச்செயலர் தேர்தல் குறித்து எந்த முன்னேற்பாடும் செய்யவில்லை. இறுதி தீர்ப்பு வந்த பிறகே தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியாகும். அதன்படி, நவ.,21ல் இறுதி விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement