கடலூர் / பொள்ளாச்சி: கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே இந்து முன்னணி ஆதரவாளர் வீட்டின் மீது நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பரங்கிப்பேட்டை அருகே பி.முட்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனு என்கிற ராமதாஸ் (52). இந்து முன்னணி ஆதரவாளரான இவர், ஸ்ரீராம அனுமான் தர்மபரிபாலன அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக உள்ளார். பு.முட்லூர் – கடலூர் சாலையில் ஆஞ்சநேயர் கோயில் ஒன்றை வைத்துள்ளார். அதே பகுதியில் 100 அடி உயரஆஞ்சநேயர் சிலை கட்டுவதற்கான பணியை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில், இவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் 2 பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதில் அவரது வீட்டு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் மற்றும் வீட்டின் முன்பு இருந்த பனை மரத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் விழுந்தன. ஜீப்பின் முன் பகுதியில் புகை படிந்துள்ளது. பனை மரத்தின் கீழே எரிந்துள்ளது.
தகவல் அறிந்த கடலூர் எஸ்பி சக்தி கணேசன், டிஎஸ்பி எஸ்.ரமேஷ்ராஜ் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
16 இடங்களை தாக்குவோம்: பொள்ளாச்சி நகர காவல்நிலைய ஆய்வாளருக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில், ‘பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் அல்லது கையெறி குண்டு வீசப்படும். காவல் துறை எங்களுக்கு எதிரியல்ல. சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த வேண்டும், எஸ்டிபிஐ, பிஎஃப்ஐ, குமரன் நகர்’ என எழுதப்பட்டிருந்தது. அதை யார் அனுப்பியது என்ற விவரங்கள் எதுவும் கடிதத்தில் இல்லை. இந்த கடிதம் நகர காவல்நிலையத்துக்கு அஞ்சலில் வந்துள்ளது. இதுகுறித்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.