புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கடைசி நிமிட வரவாக மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் மூத்த தலைவரும் காங்கிரஸ் தேர்தல் குழு தலைவருமான கே.சி.வேணுகோபால் நேற்றிரவு கார்கேவிடம் அவரே கட்சியின் விருப்பமான தெரிவாக இருப்பதாக எடுத்துரைத்து மனுத்தாக்கல் செய்யச் சொன்னதாகத் தெரிகிறது.
மும்முனைப் போட்டியா? காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் தேர்தலில் போட்டியிடுகிறார். கடைசி நாளான இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான திக் விஜய் சிங்கும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். டெல்லியில் நேற்று அவர் கூறும்போது, “வெள்ளிக்கிழமை முறைப்படி மனு தாக்கல் செய்வேன்” என்றார்.
இதற்கிடையில் மல்லிகார்ஜுன கார்கேவும் இன்று இந்தப் போட்டியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜுன கார்கே ஒருவேளை காங்கிரஸ் தலைவர் தேர்தல் பதவிக்குத் தேர்வானால் மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்வார் எனத் தெரிகிறது. திக்விஜய் சிங் மற்றும் சசி தரூர் இன்று மதியம் 3 மணிக்குள் மனுத் தாக்கல் செய்வார்கள் என்று தெரிகிறது.
இவர்களைத் தவிர ஜி23 குரூப்பில் உள்ள பூபேந்திர சிங் ஹூடா மற்றும் பிரித்விராஜ் சவான் பெயர்களும் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அடிபடுகிறது. இன்று ஜி23 தலைவர்கள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 1-ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று அன்றைய தினம் வேட்பாளர் பட்டியல் வெளியிட உள்ளது. வேட்புமனுக்களை வாபஸ் பெற 8-ம் தேதி கடைசி நாள் ஆகும். இறுதியாக வரும் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் 9,000 பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். அந்தந்த மாநில தலைமை அலுவலகங்களில் அக்டோபர் 17-ம் தேதி காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
கெலாட் விலகலுக்கு பிரியங்கா காரணமா? காங்கிரஸ் தலைவர் தேர்தல் தான் கட்சியை மீட்டெடுக்க ஒரே முயற்சி என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் நிலையில் கட்சியில் பலரும் விரும்பிய அசோக் கெலாட் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதற்கு சச்சின் பைலட்டை ராஜஸ்தான் முதல்வராக கட்சி மேலிடம் பரிந்துரைத்ததே காரணம். இதன் பின்னணியில் பிரியங்கா காந்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. பிரியங்கா, ராகுல் விருப்பத்தின் பேரிலேயே சச்சின் பைலட்டை ராஜஸ்தான் முதல்வராக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது என்றும் அதனாலேயே கெலாட் விலகினார் என்றும் தெரிகிறது.