சேலம், ஆச்சாம்குட்டப்பட்டி பகுதியை சேர்ந்த சாந்தி என்பவரது மகன் கோகுல். இவர் சேலம் அரசு தொழில் பயிற்சி கல்லூரியில் டர்னர் படிப்பில் இரண்டாமாண்டு பயின்று வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற நிலையில் வருகின்ற ஆயுதபூஜை பண்டிகையை கொண்டாடுவதற்கு முன்னேற்பாடு பணிகள் அரசு கல்லூரி நிர்வாகம் சார்பாக செய்யப்பட்டு வருகிறது.
இதில் அங்கு பணியாற்றி வரும் ஆசிரியர்கள், மாணவர்களையே சுத்தம் செய்வதற்காக பயன்படுத்தியுள்ளனர் எனக் கூறப்படுகிறது. அப்போது கோகுல் கல்லூரியின் மேற்கூரையில் ஏறி சுத்தம் செய்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மேற்கூரை உடைந்து இயந்திரங்கள் மீது விழுந்ததில், தலையின் பின்பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. பின்னர் 108 ஆம்புலன்ஸ்காக நீண்டநேரம் காத்திருந்தும் வராத நிலையில் மாணவர்களே இரு சக்கர வாகனத்தில் வைத்து படுகாயம் அடைந்த கோகுலை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
தற்போது கோகுலுக்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மருத்துவமனையின் முன்பாக மாணவனின் தாயார் மற்றும் உறவினர்கள், ஆசிரியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக கோகுலுடன் படிக்கக்கூடிய சகமாணவர்களிடம் விசாரித்தபோது, “கல்லூரி நிர்வாகம் தான் எங்களை வகுப்புகளை சுத்தம் செய்ய சொன்னார்கள். எங்க பெற்றோர்களெல்லாம் ஆசிரியர்களை நம்பிதான் கல்லூரிக்கு அனுப்புராங்க” என்று கண்ணீர் விட்டனர்.
மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவனை மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி நேரில் சந்தித்தனர்.