ஜெய்ப்பூர்,
காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா இல்லத்தில் நேற்றிரவு அரியானா முன்னாள் முதல்-மந்திரி பூபேந்தர் சிங் ஹூடா, மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரி பிருத்விராஜ் சவான், முன்னாள் மத்திய மந்திரி மணிஷ் திவாரி உள்ளிட்ட ஜி23 குழுவை சேர்ந்த தலைவர்கள் திடீர் ஆலோசனை நடத்தினர்.
அதனை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா நேற்றிரவு ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் தங்கியுள்ள ஜோத்பூர் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்து பேசினார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ள சசி தரூர் இன்று பிற்பகல் 12 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்யப்போகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜி23 குழுவை சேர்ந்த சசி தரூர் போட்டியிடுவதை அவர்கள் ஆதரிக்கவில்லை எனத் தெரிகிறது.
மற்றொரு வேட்பாளராக களம் காண உள்ள திக்விஜய சிங் 3 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்யப்போகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், “யார் யாரெல்லாம் வேட்புமனு தாக்கல் செய்யப்போகிறார்கள் என்பது தெரிந்த பின், சிறந்த வேட்பாளருக்கு எங்கள் ஆதரவு இருக்கும்” என்று பிருத்விராஜ் சவான் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். இந்நிலையில், ஜி23 குழுவை சேர்ந்த தலைவர்கள் திடீர் ஆலோசனை நடத்தியிருப்பது, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் 3வதாக ஒரு வேட்பாளர் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.