காங்கிரஸ் தலைவர் தேர்தல்: என்னது 3 பேர் போட்டியா? ட்விஸ்டுக்கு மேல் ட்விஸ்ட்…!

நாட்டின் பழம்பெரும் அரசியல் கட்சி என்ற சிறப்பு பெற்ற காங்கிரஸ் கட்சி, அதன் தலைமை பீடத்தை அலங்கரிக்க ஆட்களின்றி தவித்து கொண்டிருக்கிறது. காலங்காலமாக நேரு குடும்பத்தினர் கட்சி தலைவர் பதவியை வகித்து வந்த நிலையில் ராகுல் காந்தி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். எனவே நேரு குடும்பத்தை சாராத ஒருவர் கட்சி தலைவர் பதவிக்கு வர வேண்டியுள்ளது.

இதற்காக வரும் அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடைபெறும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இவருக்கு சோனியா காந்தி குடும்பத்தில் மிகுந்த ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் நிச்சயம் வெற்றி வாகை சூடுவார் என்ற பேசத் தொடங்கினர். திடீரென காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தாங்களும் போட்டியிடப் போவதாக சசி தரூர், திக் விஜய் சிங் ஆகியோரும் அறிவித்தனர். இதனால் காங்கிரஸ் தேர்தல் களம் சூடுபிடித்தது.

ஒரு நபருக்கு ஒரு பதவி என்ற காங்கிரஸ் கட்சியின் கொள்கையின் அடிப்படையில் ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவி யாருக்கு செல்லும் என்ற கேள்வி எழுந்தது. இதில் சச்சின் பைலட் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டன. இந்நிலையில் சச்சின் பைலட்டிற்கு எதிராக அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கொடிபிடிக்க பெரும் சிக்கலானது.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் பேச்சுவார்த்தையில் இறங்கியது. கடைசியில் மாநில அரசியல் சிக்கலால் தான் போட்டியிடப் போவதில்லை என்று அசோக் கெலாட் அறிவித்துவிட்டார். இதன் காரணமாக சசிதரூர், திக் விஜய் சிங் ஆகியோர் மட்டும் உத்தேச பட்டியலில் இருந்தனர். இந்நிலையில் புதிய வரவாக மல்லிகார்ஜுன கார்கே களமிறங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்காக தனது மாநிலங்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். ஆனால் இதுவரை யாருமே மனு தாக்கல் செய்யவில்லை. இதன் காரணமாக தொண்டர்கள் மற்றும் கட்சி தலைமை மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது. இதுதவிர ஹரியானா முன்னாள் முதல்வர் புபீந்தர் சிங், அஜய் மாகென், முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோரின் பெயர்களும் தலைவர் பதவிக்கான ரேஸில் அடிபட்டுள்ளதால் குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.