திருவனந்தபுரம்: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடக்கிறது. இதில் போட்டியிட காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் வேட்பு மனு பெற்றுள்ளார். ஆனால்சொந்த மாநில காங்கிரஸ் கட்சியினரே சசி தரூருக்கு எதிராக நிற்கின்றனர்.
ஐ.நா.வில் இருந்து அரசியல்
உள்ளுரில் சுவர் பிடித்து விளம்பரம் செய்வது, கொடி கட்டி கட்சி வேலை செய்வது என்று அடிமட்ட அளவில் இருந்து படிப்படியாக அரசியலுக்கு வந்த வரலாறு சசி தரூருக்கு இல்லை. அவர் ஐ.நா. சபையின் துணைப் பொதுச் செயலாளராக பதவி வகித்தவர். 2006-ம் ஆண்டு ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கே போட்டியிட்டவர். இப்போதும் பல நாடுகளுக்கு பயணித்து கருத்தரங்குகள், மாணவர்கள் மத்தியில் பாடங்கள் எடுக்கிறார்.
இவரது ஆழ்ந்த அறிவு காரணமாகவே, 2009 மக்களவைத் தேர்தலின்போது திருவனந்தபுரம் தொகுதியில் இவரை காங்கிரஸ் கட்சி களம் இறக்கியது. தொடர்ந்து 3-வது முறையாக இதே தொகுதியை தக்க வைத்திருக்கிறார் சசி தரூர்.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் இவரை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் கும்மனம் ராஜசேகரன் போட்டியிட்டார். இத்தனைக்கும் பாஜக.வுக்கு திருவனந்தபுரம் தொகுதியில் வலுவான அடித்தளம் இருப்பதால், தான் வகித்துவந்த ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டார் ராஜசேகரன். சசி தரூர் மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று மலையாள ஊடகங்கள் யூகித்தன. ஆனால், லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளில் வாகை சூடினார் சசி தரூர். அதற்கு காரணம் மக்கள் அவரை அறிவுஜீவியாகப் பார்ப்பதுதான்.
இன்றும் மலையாளிகள் சசி தரூரை ‘விஸ்வ புருஷன்’ என்றே செல்லமாக அழைக்கின்றனர். இதற்கு தமிழில், ‘உலக மனிதன்’ என்று பொருள். உலகின் பல நாடுகளுக்கு அடிக்கடி சென்று மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும், கருத்தரங்குகளில் பேசும் சசி தரூரை அறிவார்ந்த தளத்தில் வைத்திருக்கிறார்கள் தொகுதி மக்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் அவருக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பதற்கும் அதுவே காரணம்.
சர்ச்சைகளின் நாயகன்
எதிர்க்கட்சி அரசியலுக்கான வேகத்தைவிட, பேசுவதில் நிதானத்தைக் கடைபிடிப்பார் சசி தரூர். அதுவே அவருக்கு தொண்டர்களிடம் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் பினராயி விஜயனின் அரசு நல்லது செய்தாலும், பிரதமர் மோடியின் நடவடிக்கை பிடித்திருந்தாலும், தான் எதிர்க்கட்சி என்பதையும் மறந்து பாராட்டி விடுவார் சசிதரூர். கடந்த 17-ம் தேதி, பிரதமர் மோடியின் பிறந்த நாளில் கூட அவரோடு இருக்கும் புகைப்படத்தோடு, தன் முகநூல் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அப்படி பாராட்டி பேசியதால், அவர் கொடுத்த விலையும் மிகப்பெரியது. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் இருந்த சசி தரூர், 2014-ம் ஆண்டு அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
சசி தரூர், ஒரு வகையில் சர்ச்சைகளின் நாயகன். திலோத்தமா முகர்ஜி, கிறிஸ்டா கைல்சு என ஏற்கெனவே இரு பெண்களைத் திருமணம் செய்து விவாகரத்து செய்த சசிதரூர், 2010-ம் ஆண்டு சுனந்தா புஸ்கர் என்பவரைத் திருமணம் செய்தார். சுனந்தா 2014-ம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார். அந்த வழக்கில் சிக்கி சில காலம் சசி தரூர் அலைந்தார். ‘ரயட்’, ‘தி கிரேட் இந்தியன் நாவல்’ என ஏராளமான புத்தகங்களையும் எழுதிக் குவித்திருக்கும் சசி தரூர், ‘ஆன் எரா ஆப் டார்க்னஸ்’ என்னும் ஆங்கிலப் புத்தகத்துக்காக 2019-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றார். அதற்கான முழுதகுதி அவருக்கு இருந்தும், மத்திய அரசோடு நெருக்கமாக இருப்பதாலே இந்த விருது கிடைத்ததாக காங்கிரஸ் மட்டத்திலேயே சர்ச்சை எழுந்தது. மத்திய அமைச்சராக இருந்தபோது ஐபிஎல் சர்ச்சையிலும் சிக்கினார்.
சசிதரூர் மேல்மட்ட அளவில் சிந்திப்பவர். அதனாலேயே கேரளாவில் எளிய தொண்டர்களோடு அவருக்கு நெருக்கம் இல்லை. ஒருவேளை சசிதரூர் அகில இந்திய காங்கிரஸ் தலைவரானால், பாஜக.வுடன் நெருக்கமாக இருப்பார் என்ற குற்றச்சாட்டும் மலையாள தேசத்தில் பரவிக் கிடக்கிறது.
ஜி23 குழுவில் ஒருவர்
2019-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குப் பின்னர் கட்சியில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும். நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸின் மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியாவை வலியுறுத்தி கடிதம் எழுதினர். அந்த ‘ஜி-23’ குழுவில் சசி தரூரும் ஒருவர். காந்தி குடும்பத்துக்கு ‘ஜி-23’ மூத்த தலைவர்கள் எதிரானவர்கள் என்ற எண்ணம் கட்சியினரிடையே நிலவுகிறது. அது சசி தரூருக்கு எதிராகவும் கேரள காங்கிரஸில் திரும்பி உள்ளது.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணத்திலும் கூட சசிதரூர் திருவனந்தபுரம் முதல் கொல்லம் வரை உடன் பயணித்தார். வேட்பு மனு பெற்ற கையோடு பாலக்காடு மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியையும் சந்தித்துப் பேசினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், “சோனியா, ராகுல், பிரியங்கா மூவருமே நான் போட்டியிட ஆட்சேபம் இல்லை என்று சொன்னார்கள்” என்று விளக்கம் அளித்தார்.
கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்கு 19 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் கூட சசிதரூரை ஆதரிக்கவில்லை. சசி தரூர், நாயர் சமூகத்தைச் சேர்ந்தவர். கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசனும் நாயர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரும் கூட சசி தரூரை ஆதரிக்கவில்லை. கீழ்மட்டத்தில் இருந்து கட்சியில் படிப்படியாக முன்னேறி வராததன் பாதிப்பை இப்போதுதான் முதன்முதலாக உணர்கிறார் சசி தரூர் என்கின்றனர் கட்சியினர்.
அறிவுஜீவி எதற்கு?
சசி தரூர் பன்முகத் திறமை கொண்டவர். ஆனால், ஒரு அரசியல் கட்சியின் தலைவராக தொண்டர்களுக்கு ஏற்றவராக அவரால் இருக்க முடியாது. எதிர்க்கட்சி அரசியல் தெரியாமல், அரசியல் நாகரிகம் என்ற பெயரில் பாராட்டுப் பத்திரம் வாசிப்பார் என்று குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர் கேரள காங்கிரஸார். அதேநேரத்தில் அண்மையில் கேரளாவின் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கட்சி மாநாடு ஒன்றை நடத்தியது. அதில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கே.வி.தாமஸையும், சசிதரூரையும் அழைத்திருந்தது மார்க்சிஸ்ட். அந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என்று காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியது. அதையும் மீறி கலந்துகொண்ட கே.வி.தாமஸ் கட்சியை விட்டே நீக்கப்பட்டார். சசிதரூர் இதில் கலந்து கொள்ளவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் அவருக்குள் அண்மை காலமாக நிகழ்ந்திருக்கும் மாற்றத்தை காட்டுகின்றன என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
நாட்டிலேயே காங்கிரஸ் வலுவாக இருக்கும் மாநிலங்களில் ஒன்று கேரளா. வயநாடு தொகுதியில்தான் ராகுல் காந்தியும் எம்.பி.யாக உள்ளார். நேரு குடும்பத்துக்கு வெளியே காங்கிரஸ் தலைமையை யூகித்துக் கூட பார்க்க முடியாது என்ற மனநிலையில் இருக்கின்றனர் கேரள காங்கிரஸார். இப்படியான சூழலில் சசி தரூருக்கு எதிராக கேரள காங்கிரஸார் கொதிப்பில் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசி தரூர், அதிருப்தியில் ஒருவேளை கட்சியை விட்டு வெளியேறினால் அவரை தங்கள் கட்சியில் இணைத்துக்கொள்ள பாஜக, ஆம் ஆத்மி கட்சிகள் தயாராகவே உள்ளன. ஆனால் சசி தரூர் காங்கிரஸில் இருப்பதாலேயே வாகைசூடுகிறார். சசி தரூருக்கான அறிவுசார்ந்த வாக்குகள், காங்கிரஸ் கட்சிக்கே உரிய சிறுபான்மை வாக்குகள் இரண்டும் சேர்ந்து கிடைப்பதால்தான் அவர் வெற்றி பெறுகிறார். இதனால் வேறு எந்தக் கட்சியில் சேர்ந்தாலும் சசி தரூர் செல்லாக் காசுதான் என்றும் ஆரூடம் சொல்கிறார்கள் காங்கிரஸார்.
ஏ.கே.ஆண்டனி என்ன ஆனார்?
இளவயதில் முதல்வர், நீண்டகால பாதுகாப்புத் துறை அமைச்சர் என பல்வேறு தகுதிகளைக் கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.ஆண்டனிக்கு இப்போது 82 வயது. வயோதிகம் மற்றும் உடல் நலமின்மையால் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு கேரளாவுக்கே வந்துவிட்டார் ஆண்டனி. அண்மையில் அவரை டெல்லிக்கு அழைத்து, காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்து சோனியா காந்தி ஆலோசனை நடத்தியுள்ளார். இதேபோல் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். ஆனாலும் ராகுல் காந்தியின் யாத்திரையில் உடன் பயணித்து வருகிறார். கேரள காங்கிரஸ் கட்சியின் பெரும் ஆளுமைகளான இவர்களும் சசி தரூருக்கு எதிர் துருவத்திலேயே நிற்கின்றனர்.
‘’வேட்பு மனு தாக்கலின்போது எனக்கு இருக்கும் ஆதரவு தெரியும்’’ என முழங்கி வருகிறார் சசி தரூர். உண்மையில் அதன் பின்புதான் அவரே தன் பலத்தை அறிந்து கொள்வார் என்று முணுமுணுக்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.